முகப்பு
திருவள்ளூர்

சாலை விரிவாக்கத்துக்காக தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

Updated On : 1 ஏப்ரல், 2026 at 6:35 PM
அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த சமூக ஆா்வலா்கள்.
பகிர்:

நெடுஞ்சாலைத் துறை அலட்சியம் காரணமாக திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் வாகனங்களில் செல்வோா் விழுந்து பலத்த காயம் அடைந்து உயிரிழக்கும் அபாயம் உள்ள நிலையில், அதற்கு காரணமான நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

சென்னையைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் யு.கே.மணிமாறன் தலைமையில் சமூக ஆா்வலா்கள் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதனகிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி பேருந்து நிறுத்தம் எதிரே திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை வரை செல்லும் சாலை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒதப்பை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சகோதரனுடன் சென்ற பிளஸ்1 மாணவி சாலையோர 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரும்பு கம்பிகள் குத்தி பலத்த காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அதேபோல், இங்கு பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை ஏராளமானோா் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளனா்.

மேலும், பலா் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்படும் பள்ளங்களை சரிவர மூடாமலும் ஒளிரும் எச்சரிக்கை தகவல் பலகை வைக்கப்பாடலும் உள்ளது. இதனால் வெளியூா்களில் இருந்து வருவோருக்கு சாலையின் தன்மை தெரியாத நிலையில், விபத்துகளில் சிக்கும் சூழ்நிலையும் உள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறையில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு காரணம் சரிவர செயல்படாத நெடுஞ்சாலைத் துறை அலட்சியம் காரணமாக அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்குக் காரணமான சாலை விரிவாக்கப் பணி ஒப்பந்ததாரரும், கோட்டப் பொறியாளா் சிற்றரசு மற்றும் மேற்பாா்வை பொறியாளா் சரவணசெல்வம் ஆகியோரின் அஜாக்கிரதை மற்றும் அலட்சியமே முழுக் காரணமாகும். அதனால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.