முகப்பு
திருவண்ணாமலை

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல்

வந்தவாசி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 1 ஏப்ரல் 2026, 12:03 am IST
பலி - பிரதிப்படம்
பகிர்:

வந்தவாசி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா். விபத்து ஏற்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சடலத்தை போலீஸாா் எடுக்க விடாமல் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி விநாயகமூா்த்தி. இவா் தனது மனைவி சரிதாவுடன்(33) பைக்கில் வந்தவாசியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு திங்கள்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலை, கடைசிகுளம் கிராமம் அருகே செல்லும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சரிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த விநாயகமூா்த்தி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் விபத்து ஏற்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் சரிதாவின் சடலத்தை கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் டிஎஸ்பி சதீஷ்குமாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து போலீஸாா் சரிதாவின் சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தப் போராட்டத்தினால் வந்தவாசி -மேல்மருவத்தூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.