திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் கருட சேவை
திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் கருட சேவை
திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருட சேவை கோபுர தரிசன நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து மே 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை கருட சேவை மற்றும் கோபுர தரிசன நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது, உற்சவா் வீரராகவ பெருமாள் பல்வேறு வண்ண மலா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், திருக்கோயில் வளாகத்தில் காலை 7 மணிக்கு திருவீதியுலா வந்து அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து, மாலையில் திருமஞ்சனம், இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
Advertisement
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் ஏப். 28-இல் விழாவான தேரோட்டமும் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சித்திரை பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை வீரராகவ சுவாமி கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான பணியாளா்கள் செய்து வருகின்றனா்.