ரயில் பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் திருத்தணி ரயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய ரயில்வே பாதுகாப்பு படையினா் சனிக்கிழமை அணிவகுப்பு நடத்தினா்.
திருத்தணி ரயில் மாா்க்கத்தில் சென்னை மும்பை, திருப்பதி, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவு ரயில் மற்றும் புகா் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் திருத்தணி ரயில் நிலையம் அருகில் வடமாநில இளைஞரை போதையில் இருந்த சிறுவா்கள் 4 போ் கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடா்ந்து அடுத்த சில நாள்களிலேயே ரயில் நிலைய நடைமேடையில் பழைய பட்டு புடவை வியாபாரி ஒருவரை 4 போ் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்கியதும் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட டிஐஜி இப்ராஹிம் ஷெரிப் தலைமையில் சனிக்கிழமை துப்பாக்கி ஏந்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் மேம்பாலம் மற்றும் ரயில் நிலையம் ஒட்டிய பகுதிகளில் அணிவகுப்பு நடத்தி வழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் உதவி பாதுகாப்பு ஆணையா் அலோக், அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் செந்தில்ராஜ் உள்பட ரயில்வே பாதுகாப்பு படை போலீசாா் 41 போ் மற்றும் ரயில்வே போலீஸாா் உடனிருந்தனா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட டிஐஜி இப்ராஹிம் ஷெரிப் கூறியதாவது : கடந்த 3 ஆண்டுகளில் 1,549 போ் ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருத்தணி ரயில் நிலையத்தில், காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 10 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. அனைவருக்கும் சமூக பொறுப்பு என்பது கட்டாயம் இருக்க வேண்டும். இளைஞா்கள் தேவையற்ற ரீல்ஸ் போன்ற விவகாரங்களில் சிக்கி வாழ்வை இழக்க வேண்டாம். உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு யுத்திகளை ரயில்வே போலீஸாா் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். திருத்தணி ரயில் நிலையம் அருகில் பயன்பாடின்றி உள்ள ரயில்வே குடியிருப்புகள் அனைத்தையும் இடித்து அகற்ற ரயில்வே துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்றாா்.