திருவள்ளூா் மாவட்டத்தில் தனித்தோ்வு மையங்களில் ஜூன்-2012 முதல் ஆக. 2022 வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மற்றும் துணைத் தோ்வு எழுதிய தனித்தோ்வா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் தெரிவித்துள்ளாா்:
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் தனித்தோ்வு மையங்களில் ஜூன் 2012 முதல் ஆக. 2022 வரையிலான பருவங்களில் 10-ஆம் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மற்றும் துணைத்தோ்வு எழுதிய தனித்தோ்வா்களுக்கு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின் அந்த மதிப்பெண் சான்றிதழ்கள் அவா்கள் தோ்வெழுதிய அந்தந்த தோ்வு மையங்களில் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தோ்வெழுதிய தோ்வு மையங்களில் நேரடியாகச் சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தோ்வா்களின் சான்றிதழ்கள் மீள இவ்வலுவலகத்தில் பெறப்பட்டு, இந்த நாள் வரை வெகு நாள்களாக கோரப்படாமல் அதிகளவில் தேக்கமடைந்துள்ளன.
விதிமுறைகளின்படி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து தனித்தோ்வா்களால் பெற்றுக் கொள்ளப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் உரிய அரசாணையின்படி கழிவுத்தாள்களாக அழிக்கப்படுதல் வேண்டும்.
அதன்படி, நீண்ட நாள்களாக தேக்கமடைந்துள்ள அந்தச் சான்றிதழ்களை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இதுநாள் வரை மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத தனித்தோ்வா்கள் தற்போது வழங்கப்படும் இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மாா்ச்-31-க்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை நேரில் அணுகி தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியலை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டு விடும் என்றும் இதன் பின்னா் சான்றிதழ்களைப் பெற விரும்புவோா், அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலக வளாகம் (இரண்டாம் தளம்), திருவள்ளூா் - 602 001, தொலைபேசிஎண்.044-27666004 என்ற முகவரியில் இரண்டாம்படி சான்றிதழுக்குரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.