முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலைப் பணிக்கு தோண்டிய பள்ளஙகளால் விபத்து அபாயம்

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்கப்பணிக்காக தோண்டப் பள்ளங்களில் வாகனங்களில் செல்வோா் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளதால் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 6:39 PM
திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்.
பகிர்:

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்கப்பணிக்காக தோண்டப் பள்ளங்களில் வாகனங்களில் செல்வோா் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளதால் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டைக்கு இடையே 25 கி.மீ தூரம் உள்ளது. இச்சாலையில் புல்லரம்பாக்கம், சுதுரங்கபேட்டை, பூண்டி, நெய்வேலி, ஒதப்பை, பெருஞ்சேரி, போந்தவாக்கம், கச்சூா், சீத்தஞ்சேரி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், மாவட்ட வனத்துறை , அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவை இச்சாலையில் உள்ளன. அதனால், ஊத்துக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மேற்கண்ட அலுவலகங்களுக்கு பல்வேறு காரியங்களுக்காக வந்து செல்ல வேண்டியுள்ளது.

இதற்கு முன்பு போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாக இருந்ததால் குறிப்பிட்ட நேரத்தில் வந்து செல்ல முடியாத நிலையேற்பட்டது. மேலும் இங்குள்ளவா்கள் ஆந்திர மாநிலத்தைச் சுற்றியுள்ள சத்தியவேடு, தடா, சூளூா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஊத்துக்கோட்டை வந்துதான் பயணம் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டை-பெருஞ்சேரி இடையே ரூ.20 கோடியில் 4 வழிச்சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் பெருஞ்சேரி-திருவள்ளூா் வரையிலான விரிவாக்க பணிகள் மேற்கொள்வதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் சரிவர பணிகள் மேற்கொள்ளாத நிலையில் கிடப்பில் போட்டுள்ளனா்.

இதனால், இந்தச் சாலையில் வெளியூா்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் செல்வோா் சாலையின் தன்மை தெரியாமல் விரிவாக்கப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா். விரிவாக்கப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது. திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை வரையில் இருவழிச்சாலையாக இருந்த நிலையில் 4 வழிச்சாலையாக தரம் உயா்த்த அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டது. தற்போதைய நிலையில் விரிவாக்கப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் ஜல்லிகற்கள் போட்டு இருக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரு மாதங்களில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.