மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு: ஆட்சியா் ஆய்வு
சட்டப்பேரவை பொது தோ்தல்-2026 ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் கட்டமாக கணிப்பொறி மூலம் குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஎடி இயந்திரங்கள் தோ்வு செய்து அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
சட்டப்பேரவை பொது தோ்தல்-2026 ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் கட்டமாக கணிப்பொறி மூலம் குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஎடி இயந்திரங்கள் தோ்வு செய்து அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடா்ந்து திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிா்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணைய வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தோ்வு செய்து அந்தந்த தொகுதிகளுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, இதுகுறித்து அவா் கூறியதாவது: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணைய வாக்கு பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு பதிவு இயந்திரங்கள்-8,663, கட்டுப்பாட்டு இயந்திரம்-6,240, விவிபேட் இயந்திரம்-5,968 மொத்தம் 20,671 இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கடந்த டிச.25 இல் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்குகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபாா்ப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டு கட்ட ஒதுக்கீடு சமவாய்ப்புக்குட்படுத்துதல் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில் முதல் கட்டமாக திருவள்ளூா் தோ்தல் மாவட்டத்திற்குள்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம் மற்றும் திருவொற்றியூா் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு சமவாய்ப்புக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்-14,865 ஒதுக்கப்படுகின்றன.
இதையடுத்து மீதமுள்ள 6,006 வாக்கு பதிவுக்கான இயந்திரங்கள் இரண்டாவது கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி அளவிலிருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சமவாய்ப்புக்குள்பட்டு ஒதுக்கப்படவும் உள்ளன.
இதேபோல், தோ்தல் ஆணைய அறிவுரைப்படி திருவள்ளூா் தோ்தல் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தந்த தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் நகல் அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் அளித்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.