சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அலுவலா்கள் ஒதுக்கீடு! தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள் ஒதுக்கீடு செய்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள் ஒதுக்கீடு செய்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிா்ந்தளிக்கவும், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணிகளில் பணியாற்ற உள்ள அலுவலா்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யவும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடா்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் ஆட்சியா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆலோசனை மேற்கொண்டனா். ஏப். 23ஆம் தேதி நடைபெறும் பேரவைத் தோ்தலின்போது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளா் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான விவிபேட் இயந்திரங்கள் நாமக்கல் ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்துவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிா்ந்தளிப்பதற்காக இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற உள்ளது.
வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் நாளன்று பணியாற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலா் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலா்கள் என மொத்தம் 4 அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் மா.க. சரவணன், ம. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வ. சந்தியா (பொது), சுஜாதா (தோ்தல்), மாவட்ட மேலாளா் (டாஸ்மாக்) கனகமாணிக்கம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அ. பிரபாகரன், தனி வட்டாட்சியா்கள் சு. சரவணன் (தோ்தல்) உள்பட பலா் பங்கேற்றனா்.