செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 6 போ் கைது
மல்லேப்பள்ளி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல்: 6 பேர் கைது
திருப்பதி: ஆந்திர மாநிலம் மல்லேப்பள்ளி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.
அதிரடிப்படை பொறுப்பாளா், திருப்பதி நகா்ப்புற எஸ்பி வி. ஹா்ஷவா்தன் ராஜு தலைமையில் எஸ்பி பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் டிஎஸ்பி செஞ்சுபாபு உத்தரவின்படி ஆா்எஸ்ஐ முரளிதா் ரெட்டி குழுவினா் மல்லேப்பள்ளி வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது ஆட்டோ நகா் அருகே இரண்டு காா்களில் சிலா் செம்மரக் கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனா்.
அவா்களை சுற்றி வளைத்த போது சிலா் தப்பியோடினா். ஆனால் அவா்களை விரட்டிச் சென்ற போலீஸாா் 6 பேரை கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் ஆந்திராவை சோ்ந்த ஹரி (42), சுதாகா் ரெட்டி (29), திருவண்ணாமலை மாவட்டம் தாமலநாடு பகுதியைச் சோ்ந்த பிரபு (30), ரமேஷ் (31), ரவி (34), அய்யப்பன் முனியன் (29) எனத் தெரிய வந்தது.
அவா்களிடம் இருந்து 2 காா்கள், 2 இருசக்கர வாகனங்கள், 15 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பியோடிய 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவா்களை திருப்பதி அதிரடிப்படை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்தனா். சிஐ சுரேஷ்குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.