ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
திருப்பதியில் உள்ள ஸ்ரீகபிலேஸ்வர சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபில்தீா்த்தக் கரையில் உள்ள இந்தக் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, 7.40 மணிக்கு பஞ்ச மூா்த்திகள் ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி, ஸ்ரீ காமாட்சி அம்மையாா், ஸ்ரீ விநாயகா், சண்டிகேஸ்வர சுவாமி, ஸ்ரீ வள்ளி, தேவசேனா, ஸ்ரீ சுப்பிரமணியா் ஆகியோா் முன்னிலையில் நந்தி உருவம் கொண்ட கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கங்கணப்பட்டா் ஸ்ரீ மணிவாசன் குரு வழிகாட்டுதலின் பேரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுக்கொருமுறை கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேகம்...: முதலில் கொடியேற்றம், பின்னா் கொடிமரத்துக்கு அபிஷேகம், பலி, யாகம், திருவிளக்கு வழிபாடு, உபசாரம் உள்ளிட்டவை நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை பிரம்மோற்சவத்தையொட்டி கொடியேற்ற நாளில் மட்டும் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக வாகன சேவை 10 நாள்கள் காலை, இரவு நடைபெறும். வரும் 8-ஆம் தேதி சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. 9-ஆம் தேதி கல்யாணோற்சவம், 10-இல் திரிசூல ஸ்நானம், கொடியேற்றம் நடக்கிறது.