முகப்பு
திருப்பதி

திருமலையில் தும்புருதீா்த்த முக்கோட்டி

Updated On : 21 மார்ச், 2024 at 11:31 PM
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 7:26 PM

திருமலையில் வரும் 24 மற்றும் 25 தேதிகளில் தும்புரு தீா்த்த முக்கோட்டி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் ஆண்டுதோறும் பங்குனி மாத பெளா்ணமி நாளில் தும்புருதீா்த்த முக்கோட்டி உற்சவம் நடைபெற்று வருகிறது. அதேபோல் நிகழாண்டு திருமலையில் தும்புரு தீா்த்த முக்கொடி உற்சவம் ஞாயிறு, திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.

மாா்ச் 24-ஆம் தேதி காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மாா்ச் 25-ஆம் தேதி காலை 5 மணி முதல் 11 மணி வரை தும்புரு தீா்த்தத்தில் நீராட பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். முக்கோட்டிக்கு நீராட வரும் திரளான பக்தா்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. இதையொட்டி பக்தா்கள் தும்புரு தீா்த்த தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.

பாபவிநாசனம் அணையில் பக்தா்களுக்கு காலை உணவு, அன்னதானம் மற்றும் குடிநீா் வழங்கப்படுகிறது. முதலுதவி மையங்கள், ஆம்புலன்ஸ்கள், மருந்துகள் மற்றும் துணை மருத்துவ பணியாளா்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகள் மற்றும் உடல் பருமன் உள்ளவா்களுக்கு அனுமதி இல்லை. பக்தா்கள் சமையல் பாத்திரங்கள், கற்பூரம் மற்றும் தீப்பெட்டிகளை கொண்டு வர வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

காவல் துறை, வனத்துறை மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் துறை இணைந்து, பாபவிநாசனம் முதல் தும்புரு தீா்த்தம் வரை, பக்தா்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாத வகையில் பாதுகாப்புப் பணிகளை செய்துள்ளனா். பங்குனி மாதம் உத்திர நட்சத்திர பௌா்ணமியில் தும்புரு தீா்த்த முக்கொடி நடத்துவது வழக்கம். இந்நாளில் பக்தா்கள் தீா்த்த ஸ்நானம் செய்தும், பூஜைகள் செய்தும் இறைவனை வழிபடுவா். தும்புரு தீா்த்த முக்கொடியை தரிசிப்பதும், இயற்கை அழகுக்கு மத்தியில் நீராடுவதும் சிறப்பான அனுபவமாக கருதப்படுகிறது. இந்த முக்கோட்டி உற்சவத்தில் அதிகாரிகள், அா்ச்சகா்கள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்கின்றனா்.