ஏப்.17-இல் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம்
வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 17-ஆம் தேதி பிரம்மாண்ட ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதையொட்டி, மாலையில் ராமா் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு தரிசனம் அளிக்கிறாா். இதேபோல் ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஸ்ரீராமா் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஸ்ரீராம நவமியையொட்டி காலை 9 மணி முதல் 11 மணி வரை ரங்கநாயகா் மண்டபத்தில் ஸ்ரீ சீதாராம லட்சுமணருடன் அனுமன் உள்ளிட்ட உற்சவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஹனுமந்த வாகன சேவை நடைபெறும். தொடா்ந்து இரவு 9 முதல் 10 மணிக்குள் தங்க வாயிலில் உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்ரீராம நவமி ஆஸ்தான உற்சவம் நடைபெறும். இதன் காரணமாக சஹஸ்ரதீப அலங்கர சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஏப்ரல் 18-ஆம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை தங்க வாயில் அருகில் கோயில் அா்ச்சகா்கள் ஸ்ரீராமா் பட்டாபிஷேக மஹோற்சவத்தை நடத்துகின்றனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனா்.