திருவண்ணாமலை

குடியாத்தத்துக்கு புறவழிச் சாலை அமைக்கப்படுமா?

தொழில் நகரமான குடியாத்தத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.

கே. நடராஜன்

தொழில் நகரமான குடியாத்தத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.

36 வார்டுகளைக் கொண்ட நகராட்சி, 44 ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியது குடியாத்தம். இது ஆந்திரம், கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் சிவகாசிக்கு அடுத்தபடியாக 250-க்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இங்கு இயங்கி வருகின்றன. 27 கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும், 25-க்கும் மேற்பட்ட கைத்தறி லுங்கி உற்பத்தி நிறுவனங்களும், 200-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களும் இங்கு அமைந்துள்ளன. பீடித் தொழிலும் பிரபலமாக நடைபெறுகிறது.

இங்கு தயாராகும் தீப்பெட்டிகள், லுங்கிகள், பீடிகள் ஆகியன நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், அதிக அளவில் விளைச்சலாகும் தேங்காயும் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே வர்த்தகம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடியாத்தம் நகருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.

மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் கனரக வாகனங்கள் சித்தூர் வழியாக குடியாத்தம் வந்து செல்கின்றன.

கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள் கே.ஜி.எஃப், வி.கோட்டா வழியாக குடியாத்தம் வந்து தமிழகம் முழுவதும் செல்கின்றன.

குடியாத்தம் நகரம் உருவான காலத்தில் அமைக்கப்பட்ட குறுகிய சாலைகள்தான் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இதனால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிக எண்ணிக்கையில் விபத்துகளும் நடைபெறுகின்றன.

நெரிசல் மிகுந்த நேரங்களான காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், ஓரிரு கி.மீ. தொலைவைக் கடக்கவே சில மணி நேரம் ஆகும் நிலை குடியாத்தம் நகரில் உள்ளது.

காட்பாடி சாலை, பேர்ணாம்பட்டு சாலை, மேல்பட்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் எதிரெதிரே லாரியோ, பேருந்தோ வந்துவிட்டால், கடந்து செல்வதற்குள் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து விடுகின்றன. இதனால், மாணவர்களும், அலுவலகங்களுக்குச் செல்வோரும், பல்வேறு பணி நிமித்தமாகச் செல்வோரும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே நகரில் உள்ள முக்கியமான சாலைகளை சீரமைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ரூ. 156 கோடியில் திட்ட மதிப்பீடு: நெரிசலைத் தவிர்க்க குடியாத்தம் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இது பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.

இந்த நிலையில், குடியாத்தம்- காட்பாடி சாலையில், சேத்துவண்டை அருகே தொடங்கி, பாக்கம், சித்தூர் சாலையைக் கடந்து, பலமநேர் சாலையில் லட்சுமணாபுரம் வழியாக பெரும்பாடி சென்று பேர்ணாம்பட்டு சாலையில் இணைக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் ரூ. 156 கோடியில் ஒரு திட்ட மதிப்பீடு தயாரித்து 2 ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பி வைத்தனர்.

அதற்கு இதுவரை எந்த விதமான பதிலும் வரவில்லை.

மாற்றுத் திட்டம்: இதனிடையே, பள்ளிகொண்டா சாலையில் உள்ள அம்மணாங்குப்பம் ஏரிக்கரை வழியாக, கௌண்டன்யா ஆற்றின் வடக்குக் கரையோரம் சென்று, தற்போது கெங்கையம்மன் கோயில் அருகே ஆற்றின் கரையோரம் கட்டியுள்ள தரைப்பாலம் வழியாக, பெரும்பாடி கிராமம் சென்று பேர்ணாம்பட்டு சாலையில் சேரும் வகையில் புறவழிச் சாலை அமைக்கவும் உள்ளூர் அதிகாரிகள் ஒரு திட்டம் தயாரித்தனர். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற குறைந்த அளவு நிதியே போதுமானது.

இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT