திருவண்ணாமலை

சிறுவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டினால் பாதுகாவலர் மீது வழக்கு: மாவட்ட நீதிபதி எச்சரிக்கை

DIN

சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால், பாதுகாவலர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி எச்சரித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஹெப்ரான் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாமுக்கு பள்ளித் தாளாளர் பி.டி.எல். சங்கர் தலைமை வகித்தார். வழக்குரைஞர் பாசறை பாபு, ஒருங்கிணைப்பாளர் சையத் ரஷீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி உரிமைச் சட்டங்கள், குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான கே.ராஜ்மோகன், அடிப்படைச் சட்டங்கள், மோட்டார் வாகனச் சட்டம் குறித்து தலைமை குற்றவியல் நீதிபதி ஆர்.நாராஜா ஆகியோர் பேசினர்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: பள்ளி மாணவ, மாணவிகள் பாடத்தை மட்டும் படிக்காமல் வரலாறு, சமூகம் சார்ந்த புத்தகங்களைப் படிப்பதால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். குழந்தைகளைப் பாதுகாக்கும் இளம் சிறார் சட்டங்கள், குழந்தைகளுக்குள்ள அடிப்படை உரிமைகள் குறித்து மாணவ, மாணவிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. மீறி ஓட்டினால் பாதுகாவலர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய சட்டங்கள் குறித்து வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் சிவா பேசினார்.
இதில், பள்ளி முதல்வர் திலகவதி, பள்ளி ஆசிரியர்கள் தமிழ்வேந்தன், அருள், ராஜேஷ், சபினா, ரேவதி, இலக்கியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT