திருவண்ணாமலை மருத்துவமனைக்கு ரூ.23 லட்சத்தில் ரத்த அணுக்களை கணக்கிடும் கருவி: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 48 மணி நேரத்தில் ரூ.23 லட்சம் மதிப்பிலான ரத்த அணுக்களை கணக்கிடும் கருவி
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 48 மணி நேரத்தில் ரூ.23 லட்சம் மதிப்பிலான ரத்த அணுக்களை கணக்கிடும் கருவி வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே டெங்கு ஒழிப்பு சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார். முகாமில் வியாபாரிகள், பொதுமக்கள், பக்தர்களுக்கு பரிசோதனை செய்து உரிய சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கப்பட்டன.
வீடூ, வீடாக ஆய்வு: பின்னர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சக்கர தீர்த்தக் குளத்தில் டெங்கு கொசுக்களை அழிக்கும் தன்மைகொண்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதையடுத்து, வேங்கிக்கால் ஊராட்சி, செல்வா நகரில் உள்ள வீடுகளில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் வீடு, வீடாகச் சென்று டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.
மருத்துவக் கல்லூரியில் ஆய்வு: தொடர்ந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர்கள் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரிடம் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்: இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்துத் துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 48 மணி நேரத்தில் ரூ.23 லட்சம் மதிப்பிலான ரத்த அணுக்களை கணக்கிடும் கருவி வழங்கப்படும். இந்த மருத்துவமனையில் தீபாவளிக்கு முன்பு 160 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சைப் பெற்று வந்தனர். தற்போது 90 பேர் மட்டுமே சிகிச்சைப் பெறுகின்றனர்.
இவர்களில் 10 சதவீதம் பேருக்கு டெங்கு அறிகுறி தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுவதால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 நாள்களில் 100 சதவீதம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என்றார்.
தண்ணீர் கேட்டு தர்னா
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு செய்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது, திடீரென நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் சேர்ந்து அமைச்சர்களை முற்றுகையிட்டு மருத்துவமனையில் போதிய குடிநீர், தண்ணீர் இல்லை என்று முறையிட்டனர். இவர்களை அமைச்சர்கள் சமாதானப்படுத்தினர்.
இதனால் திருப்தி அடையாத நோயாளிகள் மருத்துவமனை எதிரே தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸார் சமாதானம் செய்து வைத்தனர்.