அதிக விலைக்கு பொருள்கள் விற்பனை: நடவடிக்கை எடுக்க நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்ட பேருந்து நிலையக் கடைகளில் அதிகபட்ச விலைக்கு பொருள்கள் விற்பதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம்
திருவண்ணாமலை மாவட்ட பேருந்து நிலையக் கடைகளில் அதிகபட்ச விலைக்கு பொருள்கள் விற்பதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பெட்காட் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் திருவண்ணாமலை தாலுகா பொறுப்பாளர்கள் அறிமுகம், ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, முத்துவிநாயகர் கோயில் தெருவில் பெட்காட் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டச் செயலரும், வழக்குரைஞருமான ப.கி.தனஞ்செயன் தலைமை வகித்தார்.
திருவண்ணாமலை பேராசிரியர் தினேஷ் கார்த்தி, ஆரணி கணேஷ், வந்தவாசி தரணி வேந்தன், செங்கம் பேராசிரியர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் இ.அன்பு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
கூட்டத்தில், எரிவாயு உருளை விநியோகத்துக்கு 5 கி.மீ. தொலைவு வரையில் நுகர்வோர்களிடம் இருந்து பணம் வசூலிக்கக் கூடாது. 5 கிலோ மீட்டருக்கு அதிகமான கூடுதல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.2.40 வீதம் வசூலிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற எரிவாயு முகவர்கள், நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் விலை நிர்ணயம் செய்துள்ளனர். இந்தத் தகவலை நுகர்வோர்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் விற்பனை செய்யப்படும் கலப்படப் பொருள்களை ஆய்வு செய்து பறிமுதல் செய்ய வேண்டும். பேருந்து நிலையக் கடைகளில் அதிகபட்ச விலைக்கு பொருள்கள் விற்பதைத் தடுக்க வேண்டும்.
பொட்டலப் பொருள்களில் தயாரிப்புத் தேதி, விலை, அளவு, காலாவதி தேதி ஆகியவற்றைக் குறிப்பிடாமல் விற்பனை செய்யும் வணிகர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்ச்சி விளம்பரங்கள், இலவசங்களைக் கண்டு நுகர்வோர் ஏமாறக் கூடாது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நுகர்வோர் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண திருவண்ணாமலை, நெ.134/102, முத்து விநாயகர் கோயில் தெரு என்ற முகவரியில் இயங்கும் கூட்டமைப்பு அலுவலகத்தை அணுகி இலவச ஆலோசனை பெறலாம். மேலும், 9080141609 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனைப் பெறலாம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கூட்டமைப்பு நிர்வாகிகள் கலசப்பாக்கம் முருகன், சேத்பட் தாமோதரன், போளூர் வழக்குரைஞர் கோமளவள்ளி, கீழ்பென்னாத்தூர் மணி, தண்டராம்பட்டு ஆ.தே.முருகையன், வெம்பாக்கம் வேல்முருகன், செய்யாறு சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.