முகப்பு
திருவண்ணாமலை

தை மாதப் பௌர்ணமி: 2-ஆவது நாளாக பக்தர்கள் கிரிவலம்

தை மாதப் பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

தை மாதப் பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த நிலையில், தை மாதப் பௌர்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) இரவு 10.09 மணி முதல் புதன்கிழமை (ஜனவரி 31) இரவு 7.58 மணி வரை கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
2-ஆவது நாளாக கிரிவலம்: தொடர்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தபடியே இருந்தனர். கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீஆதி அருணாசலேஸ்வரர் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க சன்னதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம்: ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை காலை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர். பொது தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சென்றவர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஒன்றரை மணி நேரமும் ஆனதாகத் தெரிவித்தனர்.
அமர்வு தரிசனம் ரத்து: பக்தர்கள் நலன் கருதி செவ்வாய், புதன்கிழமைகளில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதி, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
அடிப்படை வசதிகள்: நகரைச் சுற்றிலும் 9 இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பேருந்து நிலையங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →