ஏப்ரல் 3 முதல் தொடர் போராட்டம்: ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் முடிவு
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போளூரில் ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், 1,789 கணினி உதவியாளர்கள் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் முதுநிலை, இளநிலை பட்டம் பெற்றவர்கள்.
இவர்களில் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 5 பேர் சிறு விடுப்பு எடுத்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் ஊழியருக்கு 30 சதவீத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் சங்க வட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், செயலர் பாலமுருகன், அப்பதுரை, ஆறுமுகம், செண்பகம் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.