கோடி நன்மை தரும் கோடை உழவு : விவசாயிகளுக்கு ஆலோசனை
கோடி நன்மை தரும் கோடை உழவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கோடி நன்மை தரும் கோடை உழவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம். சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பாதாவது:
கோடை உழவு செய்வதற்கு இதுவே ஏற்ற தருணம். தற்சமயம் பரவலாக பெய்து வரும் கோடை மழையைப் பயன்படுத்தி உழவு செய்வது மிகவும் அவசியமாகும். முதலில் வயலை இரும்பு கலப்பைக் கொண்டோ, டிராக்டர் மூலமாகவோ குறுக்கும் நெடுக்குமாக ஆழமாக புழுதி பட உழவு செய்ய வேண்டும். இவ்வாறு கோடையில் உழவு மேற்கொள்வதால், புல், பூண்டுகளின் வேர்கள் அறுந்து கருகி விடும். கடினத் தன்மையுள்ள மண் கட்டிகள் உடைந்து மண் மிருது தன்மை அடையும்.
பயிர் செய்யும் பருவ காலங்களில் சில வகை பூச்சிகளின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூண்டுப் புழுவாக மாறி, பேரீச்சம் பழக்கொட்டை போன்ற உருவத்தில் மண்ணுக்கடியில் வளர்ந்து கொண்டிருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் இவ்வகையான புழுக்கள் மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும். இதன்மூலம் அடுத்த பயிர் சாகுபடியின் போது, பூச்சிகளின் தாக்குதல் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. களைச் செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. மண்ணில் நீர்ப் பிடிப்புத் தன்மை பெருகுகிறது. மண்ணின் பெளதீக தன்மை மேம்படுகிறது.
நாற்றங்கால் மற்றும் நடவு வயல் தயாரிப்பு மிகவும் எளிதாகிறது. மண் மிருது தன்மை பெறுவதால், அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிருக்கு நாம் இடும் உரம் சமச் சீரான முறையில் கிடைத்து வேர் வளர்ச்சி தூண்டப்படுவதுடன், பயிர் நன்கு செழித்து வளரும். இதனால், மகசூலும் கூடுதலாகக் கிடைக்கும்.
இவ்வாறு பல நன்மைகள் கிடைக்கக் கூடிய கோடை உழவை விவசாயிகள் அனைவரும் செய்து பயன் அடையலாம் என அந்தச் செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.