FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய பாஜகவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து முதல்வர் ஸ்டாலின் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 14 ஏப்ரல் 2026, 1:37 pm IST
முதல்வர் ஸ்டாலின் - படம்: எக்ஸ்.
பகிர்:

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை விடுத்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோ பதிவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்து பற்றி சொல்லவும், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும்தான் இந்த விடியோ. தேர்தல் பிரசாரத்துக்காக மட்டும் அல்லாமல், ஓடிக்கிட்டே இருந்தாலும், இந்தக் கடமை தவிர்க்க முடியாதது. நாளை மறுநாள் ஏப். 16 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு, மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கு நடுவில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். தொகுதி மறுவரையறை என்கிற சட்டத்திருத்தத்தை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப் போகிறார்கள். முதலில் இருந்தே நாம் தொடர்ந்து எச்சரித்தோம்.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பாதிப்படையக் கூடிய மாநிலங்களின் முதல்வர்களையும், முக்கியக் கட்சிகளின் தலைவர்களையும் சென்னை அழைத்து கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தினோம். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துங்கள், அளவாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், குடும்பக் கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள் என்று மத்திய அரசு கூறியதையெல்லாம் நாங்கள் கேட்டோம்.

சொன்னதையெல்லாம் ஒழுங்காக செய்ததற்காகவே, எங்களுக்கு தண்டனை கொடுப்பீர்களா? தென் மாநிலங்கள் எல்லாம் பாதிப்படையாது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உத்தரவாதம் தர வேண்டும் கேட்டிருந்தோம். ஆனால், அதற்கு எந்த பதிலும் இல்லை. இதற்காக பல்வேறு கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்திந்து முறையிட நேரம் கேட்டிருந்தோம். அதுவும் கிடைக்கவில்லை.

இப்படி நாம் சொன்ன எதையும் அவர்கள் காதில் வாங்காமல், திமுகவோடு மட்டுமல்ல; எந்தக் கட்சியோடும், எந்த மாநிலத்தோடும் கலந்து ஆலோசனை நடத்தாமல், அவர்கள் இஷ்டத்திற்கு செய்யப் பார்க்கிறார்கள்.

நேற்று மரியாதைக்குரிய சோனியா காந்தியும், நாம் கேட்டிருந்த அதே கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சிகளும் பதில் இல்லை. இப்படி அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய நினைப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்.

இன்னும் சொல்லப் போனால், மாநில உரிமைகளை மத்திய அரசு படுகொலை செய்திருக்கிறது. இந்தத் தொகுதி மறுவரையறை எப்படி செய்யப் போகிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை. அந்த சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி எந்த விளக்கமும் அவர்கள் அளிக்கவில்லை.

இவர்கள் இப்படி மறைத்து மறைத்து செய்வதால், இதன்பின்னால் எதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் அனைவரின் மனதிலுமே வலுவடைகிறது. தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். நான் மத்திய பாஜக அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் இந்த நேரத்தில் முக்கியமான ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

வருகிற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் இருந்து எங்கள் எம்பிக்கள் கலந்துகொள்வார்கள்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டைப் பாதிக்கின்ற மாதிரியோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்குகின்ற மாதிரியோ எதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்களை அனைவரும் சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம்.

தமிழ்நாடு முதல்வராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். இது தேர்தல் காலம் தான். இவர்கள் கவனம் அதில் தான் இருக்கும். நாம் தில்லியில் சைலன்டாக தமிழ்நாட்டோட தொகுதி மறுவரையறையைச் செய்து விடலாம் என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீர்கள்.இதைச் சொல்லும் நான் தமிழ்நாட்டு முதல்வர் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் தலைவர்.

நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டி இருக்கும். 50-60களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா திரும்பவும் பார்க்க வேண்டி இருக்கும். இவன் என்ன மிரட்டுகிறான் என்று நினைக்காதீர்கள். நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் அதை மிரட்டல் என்று நினைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆம், தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படும் எச்சரிக்கை இது. தேர்தல், ஆட்சி, அதிகாரம் இதுவெல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.

நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். எங்களுக்கு கொள்கைதான் முக்கியம். மாநில உரிமைகள் தான் முக்கியம். அதுதான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் எங்களுக்கு கொடுத்துவிட்டுச் சென்ற உயிர்க் கொள்கை. தமிழ்நாட்டிற்குத் தவறிழைத்துவிட்டு வழக்கம்போல் சும்மா கடந்து போக நினைத்தால், நடப்பதே வேறு... சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர் மேல் ஆணையாகச் சொல்கிறேன்.

தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம். பிரதமர் மோடி அவர்களே மீண்டும் சொல்கிறேன். இது தமிழ்நாட்டிலிருந்து உங்களை நோக்கி விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை.

Tamil Nadu Will Fight... Tamil Nadu Will Win... தமிழ்நாடு போராடும்.... தமிழ்நாடு வெல்லும்” எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

summary

Chief Minister Stalin has released a video issuing a final warning to the central BJP regarding constituency delimitation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments