முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

கேம் சேஞ்சராக திமுக! நாடாளுமன்றத்தில் பாஜக பக்கம் சாயுமா?

நாடாளுமன்றத்தில் தாக்கலாகப் போகும் மசோதாக்களும், திமுகவின் நிலைப்பாடும் பற்றி...

Updated On : 7 ஜூலை 2026, 4:18 pm IST
பிரதமர் நரேந்திர மோடியுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்) - ANI
பகிர்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரை பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பாஜக திட்டமிட்டிருக்கும் நிலையில், ‘கேம் சேஞ்சராக’ இருக்கும் திமுகவின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகின்ற ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல்களுக்கு மத்தியில் கூட்டப்பட்ட நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கும், மழைக்கால கூட்டத் தொடருக்கும் இடையே பெரியளவிலான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

Advertisement

Advertisement

கட்சித் தாவல்கள், புதிய கூட்டணிகள், புதிய இருக்கை அமைப்பு என வருகின்ற கூட்டத்தொடர் பாஜகவுக்கு சற்று சாதகமான சூழலையே ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாறிய அரசியல் களம்

மேற்கு வங்கம், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆளும் கட்சிகள் அடைந்த தோல்வி ஒட்டுமொத்த அரசியல் களத்தையே மாற்றியமைத்துள்ளது என்றால் மிகையாகாது.

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதை தொடர்ந்து, அக்கட்சியின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தனிப் பிரிவாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

மக்களவையில் திரிணமூல் காங்கிரஸில் உள்ள 28 எம்.பி.க்களில் 20 பேர் தனி அணியாகப் பிரிந்து, தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவைச் சந்தித்து, தேசியவாத குடிமக்கள் கட்சியில் தாங்கள் இணைந்ததை அங்கீகரிக்குமாறு கடிதமும் வழங்கியுள்ளனர்.

இதனிடையே, மகாராஷ்டிரத்தில் உள்ள சிவசேனை (உத்தவ் அணி) கட்சியில் மொத்தமுள்ள 9 எம்.பி.க்களில் 6 பேர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஷிண்டே சிவசேனையில் இணைந்துள்ளனர். இவர்களும் ஓம் பிர்லாவுக்கு முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்த கடிதங்கள் மீதான தனது முடிவை, மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே ஓம் பிர்லா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தரப்பிலும் மூன்றில் இரு பங்கு எம்.பி.க்கள் கட்சி மாறியிருப்பதால், இந்த விவகாரத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டம் செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து திமுக ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், அந்தக் கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக தலைமை அறிவித்தது. தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் திமுக பங்கேற்கவில்லை. திமுக வசம் 22 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர்.

அதிகரித்த பாஜகவின் பலம்

நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது வலுவான நிலையை அடைந்துள்ளது. மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை எட்ட மிக அருகில் உள்ளது.

மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்குக்கு 362 என்ற எண்ணிக்கை தேவை. இந்த எண்ணிக்கை இருந்தால் மட்டுமே அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தத்தைக் கொண்டு வர முடியும்.

தற்போது மூன்று மக்களவை உறுப்பினர்கள் உயிரிழந்த நிலையில், அந்த இடங்கள் காலியாகின. இதன் மூலம், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 360 ஆகக் குறைந்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் ஆதரவுள்ளது. திரிணமூல் காங்கிரஸின் 20 எம்.பி.க்கள், உத்தவ சிவசேனையின் 6 எம்.பி.க்கள் ஆதரவைச் சேர்த்தால் 319 ஆக உயரும்.

ஒருவேளை திமுக ஆதரவு அளிக்கும் பட்சத்தில், அவர்களின் 22 எம்.பி.க்களைச் சேர்த்தால் 341 ஆகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 298 எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தது. அதாவது, அதன் அடிப்படை பலத்தைவிட 5 பேரின் ஆதரவு கூடுதலாக கிடைத்தது. தற்போதும் அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தால் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை நெருங்கிவிடும்.

மீதமுள்ள ஆதரவை சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் மூலம் பெற்றுவிட முடியும் என்று பாஜக நம்புகிறது.

அரசியலமைப்பை மாற்றும் மசோதாக்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரை பல முக்கிய மசோதாக்களை மீண்டும் தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

  • மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டு முதல் அமலாக்கவும், அதற்கு ஏற்ற வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்கள் மீண்டும் தாக்கலாக வாய்ப்பு

  • பிரதமர், முதல்வர் அல்லது அமைச்சர்கள் ஊழல், பயங்கரவாதம் போன்ற கடுமையான குற்றங்களுக்காகத் தொடர்ந்து 30 நாள்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால், தானாகவே அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வகையில் 130-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தாக்கலாக வாய்ப்பு

  • 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு

  • வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (Foreign Contribution Regulation Amendment Bill, 2026), இந்திய உயர்கல்வி அமைப்புகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவரும் விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் (Viksit Bharat Shiksha Adhishthan) மசோதா மற்றும் ஊக்கமருந்து தடுப்பு (Anti-Doping) மசோதா போன்றவை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு

கேம் சேஞ்சராக திமுக

இந்தியா கூட்டணியிலிருந்து திமுக விலகியிருக்கும் சூழலில், வருகின்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேறு பகுதியில் இருக்கைகளை மாற்றிக் கொடுக்குமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சூழலில், தொகுதி மறுவரையறை, ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரக் கூடிய மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு திமுகவின் 22 எம்.பி.க்களின் ஆதரவு இன்றியமையாததாக மாறிவிட்டது.

திமுகவின் ஆதரவு இல்லையென்றால், பாஜகவால் வருகின்ற மழைக்கால கூட்டத்தொடருக்குள் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை நெருங்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதனிடையே, திமுகவிடமிருந்து நிபந்தனையுடன் கூடிய ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கியிருப்பதாக உறுதிசெய்யப்பட இயலாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகக் கடும் போராட்டங்களை முன்னெடுத்த திமுக, தற்போது அதனை நிறைவேற்ற ஆதரவளிக்குமா? என்பது கேள்விக்குறியே.

மறுபுறம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக அறியப்படும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மூலம் அவரை மீண்டும் இந்தியா கூட்டணிக்குள் தக்கவைக்கும் முயற்சிகளும் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை தமிழ்நாடு அரசியல் களத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய இரு தரப்பினருக்கும் ஆதரவாக செயல்படாமல், வாக்கெடுப்பை புறக்கணித்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தால், அதுவும் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாகவே பொருள்.

ஏனெனில், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 360-லிருந்து 350-க்கு கீழ் குறைந்துவிடும். வேறு சில கட்சிகளையும் இதேபோல் புறக்கணிக்கச் செய்து, மசோதாக்களை நிறைவேற்ற பாஜக திட்டமிட வாய்ப்புள்ளது.

இத்தகைய சூழலில், நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களமும் திமுகவின் முடிவை உற்று கவனித்துக் கொண்டுள்ளது.

முந்தைய நிலைப்பாட்டில் மாறாமல் மத்திய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து திமுக தொடர்ந்து பயணிக்குமா? அல்லது பாஜக பக்கம் சாயுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்!

summary

DMK as a game-changer! Will it lean towards the BJP in Parliament?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments