முகப்பு
சிறப்புச் செய்திகள்

திமுக, திரிணமூல் ஆதரவுடன் தொகுதி மறுவரையறை மசோதா? பாஜக திட்டமும் கணக்கும்!

தொகுதி மறுவரையறை மசோதா - பாஜக திட்டமும் கணக்கும்...

Updated On : 10 ஜூன் 2026, 4:08 pm IST
மமதா பானர்ஜி / நரேந்திர மோடி / மு.க. ஸ்டாலின் - சித்திரிப்பு - விஜய் / சாட் ஜிபிடி
பகிர்:

இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகல், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்திக் கொண்டு, மத்தியில் வருகின்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய பாஜக திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வருகின்ற ஜூலை மூன்றாவது வாரம் கூடவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல்களுக்கு மத்தியில் கூட்டப்பட்ட நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏற்ற வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

Advertisement

Advertisement

ஆனால், இந்த மசோதாவால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன.

இந்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் வாக்குகள் கிடைக்காததால் தோல்வி அடைந்தது.

மழைக்காலத் தொடரில் மீண்டும் தாக்கல்?

மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்டவை நிறைவேற்ற முடியாமல் போனது.

இந்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்ததையடுத்து, கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் காங்கிரஸுக்கு மொத்தம் 80 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 58 எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

கட்சி முடிவுக்கு மாறாக, ரிதப்ரதா பானர்ஜியை கட்சியின் பேரவைக் குழுத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆதரிக்க திரிணமூலின் 58 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் வழங்கியதை தொடர்ந்து, அவரை பேரவைத் தலைவரும் அங்கீகரித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதமே கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. காகோலி கோஷ் தஸ்தி தலைமையில் 20 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கட்சியைக் கைப்பற்றும் முயற்சியைத் தொடங்கிவிட்டனர்.

கடந்த திங்கள்கிழமை மக்களவைத் தலைவரைச் சந்தித்த காகோலி கோஷ் தஸ்தி, மக்களவையில் மொத்தமுள்ள 29 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களில் 20 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாக கடிதம் வழங்கினார். மேலும், மக்களவை கட்சித் தலைவர் பதவியில் இருந்து அபிஷேக் பானர்ஜியை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்றில் இரு பங்கு எம்.பி.க்கள் காகோலி கோஷ் தஸ்திக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பட்சத்தில், கட்சித் தலைமையால் இவர்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோர முடியாது.

தொடர்ந்து, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும், காகோலி கோஷ் தஸ்தி பிரிவு எம்.பி.க்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 300 என்ற எண்ணிக்கையைக் கடந்துவிடும்.

இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த திமுக ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், அக் கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக தலைமை அறிவித்தது. தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் திமுக பங்கேற்கவில்லை.

மக்களவையில் திமுகவுக்கு 22 எம்.பி.க்கள் உள்ள நிலையில், அவர்களிடமிருந்து நிபந்தனையுடன் கூடிய ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கியிருப்பதாக உறுதிசெய்யப்பட இயலாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சாத்தியமானால், மூன்றில் இரு பங்கு ஆதரவு எண்ணிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி நெருங்கிவிடும்.

இந்த பெரும்பான்மையைப் பயன்படுத்தி, பல முக்கிய மசோதாக்களை வருகின்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.

இவற்றில், தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு, ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற மசோதாக்கள் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் கணக்கு

மக்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் 131-வது பிரிவில் திருத்தம் கொண்டுவர மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கட்டாயம்.

மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 362 பேர் ஆதரவளிக்க வேண்டும்.

தற்போது மூன்று மக்களவை உறுப்பினர்கள் உயிரிழந்த நிலையில், அந்த இடங்கள் காலியாகின. இதன் மூலம், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 360 ஆகக் குறைந்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் ஆதரவுள்ளது. திரிணமூல் காங்கிரஸின் 20 எம்.பி.க்களும், திமுகவின் 22 எம்.பி.க்களும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் எண்ணிக்கை 335 ஆக உயரும்.

சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சியிலிருக்கும் 9 எம்.பி.க்களில் 6 பேருடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், அவர்களின் ஆதரவு கிடைத்தால் பலம் 341-ஐ எட்டும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கான வாக்கெடுப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதாவது, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் இல்லாமல், வெளியிலிருந்தும் ஆதரவைப் பெற்றனர்.

இந்த கூடுதல் வாக்குகள் மீண்டும் கிடைக்கும்பட்சத்தில் 350 என்ற எண்ணிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி நெருங்கிவிடும்.

மீதமுள்ள ஆதரவை சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் மூலம் பெற்றுவிட முடியும் என்று பாஜக நம்புகிறது.

இதேபோல், மாநிலங்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 164 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

ஆம் ஆத்மியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததன் மூலம் 150 உறுப்பினர்கள் ஆதரவை ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்துவிட்டது.

மாநிலங்களவையில் திரிணமூல் கட்சிக்கு 13 எம்.பி.க்கள் இருந்த நிலையில், சுகேந்து சேகர் ராய் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்புள்ளது.

இதே ஃபார்முலாவை திரிணமூலைச் சேர்ந்த பிற மாநிலங்களவை உறுப்பினர்களும் பின்பற்றக்கூடும்.

மாநிலங்களவையில் 8 எம்.பி.க்களை கொண்ட திமுக ஆதரவளித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிக எளிதாக மசோதாவை நிறைவேற்றிவிட முடியும்.

ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகக் கடும் போராட்டங்களை முன்னெடுத்த திமுக, தற்போது அதனை நிறைவேற்ற ஆதரவளிக்குமா? தங்கள் நிலைப்பாட்டில் இவ்வளவு பெரிய மாற்றத்தைத் திமுக மேற்கொள்ளலாம் என்பது நம்பக்கூடியதாகத் தெரியவில்லை.

எனினும், 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' என்றொரு கோட்பாடும் இருக்கிறது. யார், யார் என்ன செய்யக் காத்திருக்கிறார்கள்? பார்க்கலாம்.

summary

Delimitation Bill with DMK and Trinamool support? The BJP's plan and calculations!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.