ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: நில அளவையர், இடைத் தரகர் கைது
திருவண்ணாமலையில் வீட்டுமனை பட்டா மாறுதல் செய்து தர ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகர நிலவரித் திட்ட நிள அளவையர், இடைத் தரகர் ஆகியோரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார்
திருவண்ணாமலையில் வீட்டுமனை பட்டா மாறுதல் செய்து தர ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகர நிலவரித் திட்ட நிள அளவையர், இடைத் தரகர் ஆகியோரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருவண்ணாமலை திருவூடல் தெருவிலுள்ள தனியார் தங்கும் விடுதியின் மேலாளராகப் பணிபுரிபவர் ஜெயச்சந்திரன் (45). இவர் திருவண்ணாமலை கொசமடத் தெருவில் வீட்டுமனை ஒன்றை விலைக்கு வாங்கினாராம். இந்த மனையை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தரக் கோரி, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் இயங்கும் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஜெயச்சந்திரன் பெயரில் பட்டா மாறுதல் செய்து தர நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் டெபுடி சர்வேயராக பணிபுரியும் கருணாகரன் (38), இடைத் தரகராகச் செயல்படும் டெய்லர் (எ) மூர்த்தி (65) ஆகியோர் சேர்ந்து ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டனராம். ஜெயச்சந்திரன் பணம் தராததால், பட்டா மாறுதல் செய்யாமல் கருணாகரன் காலம் கடத்தி வந்தாராம்.
எனவே, பட்டா மாறுதல் செய்து தரக் கோரி ஜெயச்சந்திரன் மீண்டும் ஒரு முறை கருணாகரனிடம் கேட்டாராம். அப்போதும், ரூ. 20 ஆயிரம் தருமாறு கேட்டதால், இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அண்மையில் ஜெயச்சந்திரன் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீஸாரின் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் திங்கள்கிழமை ஜெயச்சந்திரன் நகர நிலவரித் திட்ட அலுவலகத்துக்குச் சென்றார். அங்கிருந்த இடைத் தரகர் டெய்லர் (எ) மூர்த்தி ரூ. 20 ஆயிரம் லஞ்சப் பணத்தை வாங்கி கருணாகரனிடம் கொடுத்தாராம்.
அப்போது, மறைந்திருந்த டிஎஸ்பி சரவணக்குமார், ஆய்வாளர் அருள்பிரசாத் உள்ளிட்டோர் கருணாகரன், மூர்த்தியைக் கைது செய்தனர்.