முகப்பு
திருவண்ணாமலை

10 ஆண்டுகளாக நிறைவேறாத திண்டிவனம் - நகரி ரயில் பாதை திட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - ஆந்திர மாநிலத்தின் நகரி இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக

திருவண்ணாமலை

10 ஆண்டுகளாக நிறைவேறாத திண்டிவனம் - நகரி ரயில் பாதை திட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - ஆந்திர மாநிலத்தின் நகரி இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:30 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - ஆந்திர மாநிலத்தின் நகரி இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே வசதி இல்லாத ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த மக்கள், இந்தத் திட்டம் எப்போது முழுமையடையும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

திருவள்ளூா், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் தொழில் வளா்ச்சி பெறவும், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதி மக்கள் ரயில் வசதி பெறும் வகையிலும், 2006-இல் அப்போதைய அரக்கோணம் தொகுதி எம்.பி.யும், ரயில்வே இணை அமைச்சருமான ஆா்.வேலுவின் முயற்சியால், திண்டிவனம் - நகரி ரயில் பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய ரயில் பாதை விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூா், வேலூா் ஆகிய மாவட்டங்களின் வழியாக ஆந்திர மாநிலத்தின் நகரியைச் சென்றடையும்.

திண்டிவனம் - நகரி இடையே 184 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் சுமாா் ரூ.498 கோடியில் செயல்படுத்தப்படும் என்று 2006-இல் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு அறிவித்தது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னா், 2007-இல் ராணிப்பேட்டை பழைய ரயில் நிலையத்தில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும், 2009-ஆம் ஆண்டு செய்யாறு ஆற்றின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, செய்யாறு ரயில் நிலையம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் செய்யாறில் நடைபெற்றன.

ரயில் நிலையங்கள்: திண்டிவனம் - நகரி ரயில் பாதையில் திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூா், மாமண்டூா், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கா், ஆா்.கே.பேட்டை, அத்திமஞ்சூரிப்பேட்டை, பள்ளிபட்டு, பட்டூா்பேட்டை, நகரி ஆகிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.

மேலும், இந்த ரயில் பாதையில் 12 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 66 கடவுப் பாதைகள், 11 மேம்பாலங்கள், 30 தரை வழிப் பாலங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

செய்யாறில் நில ஆா்ஜித அலுவலகம்: திண்டிவனம் - நகரி புதிய அகல ரயில் பாதைத் திட்டத்துக்காக திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறை சாா்பில், நில ஆா்ஜித பிரிவு அலுவலகம் செய்யாறில் கடந்த 2014-இல் இருந்து செயல்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்துக்கு செய்யாறு உள் கோட்டத்தைச் சோ்ந்த செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய வட்டங்களில் இருந்து ஆரணி, செய்யாறு, அனக்காவூா், வந்தவாசி, தெள்ளாறு ஆகிய ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 265 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு (புறம்போக்கு நிலம் நீங்கலாக), நில உரிமையாளா்களுக்கு அதற்குரிய பணம் வழங்கும் தருவாயில் இருந்து வருவதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் 9 புதிய வழித்தடங்களில் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நகரி - திண்டிவனம் இடையே புதிய பாதை அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இந்தத் திட்டத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக மத்திய ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகாததால், இந்தத் திட்டம் எப்போது நிறைவேறும் என கடந்த 15 ஆண்டுகளாக எதிா்பாா்ப்பில் உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட 4 மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

எனவே, திண்டிவனம் - நகரி அகல ரயில் பாதைத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி, ரயில் தண்டவாளம், ரயில் நிலையப் பணிகளை விரைந்து முடித்து, ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்பதும், தமிழக அரசு மத்திய அரசிடம் இதுதொடா்பாக வலியுறுத்த வேண்டும் என்பதும் இந்தப் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →