திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா குறித்து...
காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பாடல் பெற்ற தலமாகவும், உன்மத்த நடனமாடும் செண்பக தியாகராஜர் அருள்பாலிக்கும் தலமாகவும், நளச்சக்கரவர்த்திக்கு விமோசனம் கிடைத்த தலமாகவும் என பல்வேறு சிறப்புகளுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் இந்த தலம் அமைந்துள்ளது.
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர சனி கிரகம், இரண்டரை முதல் இரண்டே முக்கால் ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
Advertisement
Advertisement
இந்த தலத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான், அபய முத்திரையுடன், கிழக்கு நோக்கிய பார்வையில், அனுகிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.
இந்த கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக உள்ள சனிபகவானுக்கு சனிப்பெயர்ச்சி விழா நாளில் விமரிசையான அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு பிரவேசிக்கும் நிகழ்வை குறிக்கும் வகையில், மங்கள வாத்தியங்கள் இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மலர்களால் மாலை சாத்தப்பட்டு, தங்க அங்கியுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.
தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் நளன் குளத்தில் அதிகாலை முதல் நல்லெண்ணெய் தேய்த்து நீராடினர். பிறகு சனீஸ்வரபகவானை தரிசிக்க கோயிலுக்கு சென்றுகொண்டிருக்கிறனர்.
பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக கட்டணமில்லா தரிசனம் மற்றும் ரூ.300, ரூ.600, ரூ.1,000 ஆகிய வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதிகாலை முதல் வரிசையில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம், திருநள்ளாற்றில் பல்வேறு இடங்களில் கட்டணத்துக்கான டிக்கெட் வழங்கும் மையத்தை அமைத்துள்ளது.
அன்னதானக்கூடம்
பல்வேறு இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பிலும், பிற அமைப்புகள் சார்பிலும் அன்னதானக்கூடம் அமைத்து, பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டுவருகிறது.
நளன் தீர்த்தக் குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தீர்த்தக்குளத்தில் யாரேனும் மூழ்கிவிட்டால், அவரை மீட்க நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் படகு மூலம் குளத்தை சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்க காக வாகனத்தில் ஸ்ரீ சனீஸ்வரர்
கோயிலில் தங்க காக வாகனத்தில் உற்சவரான ஸ்ரீ சனீஸ்வரபகவான் வடக்குப் பிரகார மண்டபத்துக்கு வியாழக்கிழமை இரவு எழுந்தருளச் செய்யப்பட்டார். வரிசையில் செல்லும் பக்தர்கள் தங்க காக வாகனத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வரபகவானை தரிசித்து செல்கின்றனர்.
துணை நிலை ஆளுநர் தரிசனம்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்,மாவட்ட ஆட்சியர் இஷிதா ரதி, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.
Thousands of devotees are participating in the Sani peyarchi festival held at the Sri Pranambigai Sametha Darbaranyeswarar Temple in Thirunallar on Friday and are having darshan of the Lord.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.