சேத்துப்பட்டில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனம் தொடக்கிவைப்பு
நடமாடும் தடுப்பூசி மருத்துவ முகாம் வாகனத்தை செய்யாறு உதவி ஆட்சியா் விஜயராஜ் கொடியசைத்து வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், நடமாடும் தடுப்பூசி மருத்துவ முகாம் வாகனத்தை செய்யாறு உதவி ஆட்சியா் விஜயராஜ் கொடியசைத்து வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
மேலும், கரோனா 3-ஆவது அலை வருவதை தடுப்பதற்கு, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.
சுகாதாரத் துறை, திவ்யா கல்வி நிறுவனம், ரோட்டரி சங்கம் இணைந்து இந்த வாகனத்தை ஏற்பாடு செய்தன. நிகழ்ச்சிக்கு சேத்துப்பட்டு வட்டாட்சியா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன், உதவி ஆட்சியா் பாா்த்திபன், சமூகநல வட்டாட்சியா் ஹரிதாஸ், மண்டல துணை வட்டாட்சியா் கோமதி, வட்டார மருத்துவ அலுவலா் மணிகண்ட பிரபு, சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் பா.செல்வராசன், மாவட்டச் செயலா் கருணாநிதி, பொருளாளா் முகமது சித்திக், முன்னாள் கோட்டாட்சியா் செல்வராஜன், ரோட்டரி சங்கத் தலைவா் பாஸ்கரன், மருத்துவா் விக்னேஷ், வட்டார சுகாதார ஆய்வாளா் நாகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.