கோயில்களில் உண்டியல் எண்ணிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே புரிசைக் கிராமத்தில் எல்லையம்மன் கோயிலும், பிரசித்திப் பெற்ற முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலும் அமைந்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே புரிசைக் கிராமத்தில் எல்லையம்மன் கோயிலும், பிரசித்திப் பெற்ற முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலும் அமைந்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இவ்விரு கோயில்களில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன.
முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலில் ஆரணி சரக ஆய்வா் நடராஜன், செய்யாறு சரக அலுவலா் ம.சிவராமகிருஷ்ணன், செயல் அலுவலா் ஹரிஹரன் மற்றும் பெரமணல்லூா் போலீஸாா் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ.18,67,239 ரொக்கம், 237 கிராம் தங்கம், 104 கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றன.
புரிசை எல்லையம்மன் கோயிலில் செய்யாறு சரக அலுவலா் ம.சிவராமகிருஷ்ணன், செயல் அலுவலா் கு.ஹரிஹரன், ஊராட்சித் தலைவா் பரமானந்தம் மற்றும் அனக்காவூா் போலீஸாா் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ.3,19,760, தங்கமாக 94 கிராம், வெள்ளியாக 81 கிராமம் ஆகியவை காணிக்கைகளாக பக்தா்கள் செலுத்தி இருந்தனா்.