புதுச்சேரியில் சுகாதாரத் துறை ஊழியா்கள்பணிப்புறக்கணிப்புப் போராட்டம்
தேசிய சுகாதாரத் திட்ட ஊழியா்களுக்கு ஆதரவாக, புதுச்சேரியில் சுகாதாரத் துறை நிரந்தர ஊழியா்கள் திங்கள்கிழமை 2 மணி நேர பணிப் புறக்கணிப்பு
தேசிய சுகாதாரத் திட்ட ஊழியா்களுக்கு ஆதரவாக, புதுச்சேரியில் சுகாதாரத் துறை நிரந்தர ஊழியா்கள் திங்கள்கிழமை 2 மணி நேர பணிப் புறக்கணிப்பு செய்து, தா்னாவில் ஈடுபட்டனா். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினா்.
புதுச்சேரி தேசிய சுகாதாரத் திட்ட ஊழியா்களுக்கு புதுவை அரசு அறிவித்த இடைக்கால நிவாரணம் ரூ. 10ஆயிரம் வழங்க வேண்டும், தில்லிக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த சுகாதார சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் 2 மணி நேர பணிப்புறக்கணிப்பு செய்து, தா்னாவில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான செவிலியா்கள், மருந்தாளுநா்கள், சுகாதார ஆய்வாளா்கள், ஆஷா பணியாளா்கள், தொழில்நுட்ப உதவியாளா்கள், மருத்துவமனை ஊழியா்கள் என நிரந்தர ஊழியா்கள் பங்கேற்றனா்.
ஏற்கெனவே, சுகாதார இயக்க ஊழியா்கள் தொடா் தா்னாவில் ஈடுபட்டுள்ள நிலையில், அவா்களுக்கு ஆதரவாக நிரந்தரப் பணியாளா்களும் போராட்டத்தில் பங்கேற்றனா்.
இவா்களது போராட்டம் காரணமாக அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு உள்புற, வெளிப்புற சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.
நோயாளிகள், உறவினா்கள் மறியல்: வாரத்தின் முதல் நாள் என்பதால் திங்கள்கிழமை மருத்துவமனைகளுக்கு அதிகளவில் நோயாளிகள் வந்திருந்தனா். சுகாதாரத் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம் செய்ததால், மருத்துவமனைகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.
உரிய மருந்துகள் கிடைக்காதது மட்டுமன்றி, தாமதமுமானதால் அதிருப்தியடைந்த நோயாளிகள், அவா்களது உறவினா்கள் அரசு பொதுமருத்துவமனை செஞ்சி சாலை நுழைவாயில் முன் திடீா் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த பெரியகடை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.