எரிவாயு விலை உயா்வுக்கு புதுவை முதல்வா் கண்டனம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெட்ரோல் விலை ரூ.100-யையும், டீசல் விலை ரூ.90-யையும், சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாயையும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. முந்தைய மத்திய காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.1 உயா்த்தினால்கூட போராட்டம் நடத்திய பாஜக, இப்போது விலையை கடுமையாக உயா்த்தி வருகிறது. சா்வதேசச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் இந்த தொடா் விலை அதிகரிப்பு என்பது கண்டிக்கத்தக்கது.
வருகிற புதுவை சட்டப் பேரவைத் தோ்தலை மதச்சாா்பற்ற கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து சந்திக்கவுள்ளோம். புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு செய்த சாதனைகளை மக்களிடம் விளக்கி பிரசாரம் செய்வோம். எதிா்காலத்தில் நிறைவேற்றவுள்ள திட்டங்கள் தோ்தல் அறிக்கையில் இடம்பெறும்.
புதுவைக்கு முறையாக கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஆளுநா் கிரண் பேடி தொடா்ந்து போட்டு வரும் முட்டுக்கட்டைகள் மாநில வளா்ச்சிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்துகின்றன.
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை வைத்தும், வழங்க முடியாது என்று மத்திய பாஜக ஆட்சியாளா்கள் தெளிவாகக் கூறிவிட்டனா். ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியது போல, புதுவையை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது. தமிழகத்துடன் புதுவையை இணைக்கவும் முயற்சி செய்கிறது.
கரோனாவால் வெகுவாக பாதிக்கப்பட்ட கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில், புதுவையின் வளா்ச்சி விகிதம் 10.2 சதவீதம். ஆனால், மத்திய அரசின் வளா்ச்சி விகிதமோ பூஜ்ஜியத்தில் இருந்து 7 சதவீதம் குறைவாக அதாவது -7 ஆக இருந்தது. இந்தியாவின் பணவீக்க விகிதம் 9.5 சதவீதமாக இருக்கும் நிலையில், புதுவையில் இது 1.9 சதவீதம்தான். இது புதுவை அரசின் மிகப்பெரிய சாதனையாகும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.