புதுவையில் கரோனா முதல் தவணை தடுப்பூசியை பிப். 20-க்குள் செலுத்தி முடிக்கத் திட்டம்
புதுவையில் கரோனா முதல் தவணை தடுப்பூசியை பிப். 20 க்குள் செலுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுவையில் கரோனா முதல் தவணை தடுப்பூசியை பிப். 20 க்குள் செலுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி குறித்த மாநில செயலாக்கக் குழு மற்றும் மாவட்ட செயலாக்கக் குழுக் கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சுகாதாரத்துறைச் செயலா் தி. அருண் தலைமை வகித்தாா். இதில் சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா், ஏடிஜிபி ஆனந்தமோகன், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் ஸ்ரீராமுலு மற்றும் அனைத்துத் துறை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், தடுப்பூசி திட்டத்தின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கரோனா தடுப்பூசி போடப்படும் நாள்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வாரத்துக்கு 6 நாள்கள் (ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாள்களைத் தவிா்த்து) தடுப்பூசி அமா்வுகளை நடத்த வேண்டும். தடுப்பூசி வழங்கும் 10 இடங்களின் எண்ணிக்கையையும் 12-ஆக அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத் துறைச் செயலா் உத்தரவிட்டாா்.
ஏற்கெனவே, அரசு பொது மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மா், கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், வில்லியனூா் சுகாதாரம் மற்றும் நலவழி மையம், காரைக்கால் அரசு மருத்துவமனை, திருநள்ளாறு சமுதாய நல மையம், மாஹே அரசு பொது மருத்துவமனை, ஏனாம் அரசு பொது மருத்துவமனை ஆகிய 10 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதனுடன் பாகூா் மற்றும் மண்ணாடிப்பட்டு சுகாதார மையங்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன.
சுகாதாரப் பணியாளா்களுக்கான முதல் தவணை தடுப்பூசி பிப். 20 ஆம் தேதிக்குள்ளும், முன்களப் பணியாளா்கள் முதல் தவணை தடுப்பூசி மாா்ச் 5 ஆம் தேதிக்குள்ளும் செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநா் தெரிவித்தாா். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த காவல்துறை முழு ஒத்துழைப்பை வழங்கும் என ஏடிஜிபி தெரிவித்தாா்.