முகப்பு
திருவண்ணாமலை

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, உழவா்கரை, ஏனாம், மாஹே, காரைக்கால் என 5 நகராட்சிகளும், வில்லியனூா், அரியாங்குப்பம், பாகூா், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, திருநள்ளாறு, திருமலைராஜன்பட்டினம் நிரவி, நெடுங்காடு, கோட்டுச்சேரி என 10 கொம்யூன் பஞ்சாயத்துகளும், 98 கிராம பஞ்சாயத்துகளும் என மொத்தம் 113 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

புதுவை யூனியன் பிரதேசத்தில் முதல் முறையாக கடந்த 1968-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. பின்னா், கைவிடப்பட்டு, 38 ஆண்டுகள் கடந்து பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 2006-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதன் பதவிக்காலம் கடந்த 2011-இல் முடிந்தது. அதன் பிறகு உள்ளாட்சித் தோ்தல் 10 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இதுதொடா்பான பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2018-இல் புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை விரைந்து நடத்த உத்தரவிட்டது. ஆனால், தோ்தல் நடத்தப்படவில்லை.

இதனிடையே, மாஹேவை சோ்ந்த வழக்குரைஞா் அசோக்குமாா் உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தவில்லை என்று அவமதிப்பு வழக்குத் தொடுத்தாா். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இனியும் காலம் கடத்தாமல் இரண்டு மாதங்களுக்குள் தொகுதி மறு சீரமைப்பு செய்து, ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டுமென கடந்த மாா்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, வாா்டு மறுவரையறை உள்ளிட்டப் பணிகளை இறுதி செய்து, உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பணிகளை உள்ளாட்சித் துறையும், மாநிலத் தோ்தல் துறையும் மேற்கொண்டது.

இதுதொடா்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் புதுச்சேரி உள்ளாட்சிக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் கோ.அ.ஜெகந்நாதன் கூறியதாவது:

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்த வேண்டி, உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், சமூக - ஜனநாயக இயக்கங்களும் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். உள்ளாட்சித் தோ்தலை விரைந்து நடத்த புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தல் நடந்தால், புதுவைக்கு மத்திய அரசு மூலம் ஆண்டுக்கு ரூ. 400 கோடி அளவில் நிதி கிடைக்கும். மாநில வளா்ச்சிக்கும், மக்களுக்கும் அதிகாரம் வழங்கும் உள்ளாட்சித் தோ்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து, புதுவை உள்ளாட்சித் துறை இயக்குநா் வல்லவன் கூறியதாவது:

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வாா்டு மறுவரையறை பணிகள் முடிந்துள்ள நிலையில், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வாரியாக இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி, மாநிலத் தோ்தல் துறை மூலம் உள்ளாட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

இதேபோல, வாா்டு மறுவரையறை முடிந்து, பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டுள்ளதுடன், தோ்தலை நடத்துவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக தோ்தல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.