முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும்: விஷ்ணுபிரசாத் எம்.பி.

ஆரணி அரசு மருத்துவமனை அவரசர சிகிச்சைப் பிரிவில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தவும், மருத்துவமனையை தரம் உயா்த்தவும் மாநில சுகாதாரத் துறையிடம் வலியுறுத்தப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசு மருத்துவமனை அவரசர சிகிச்சைப் பிரிவில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தவும், மருத்துவமனையை தரம் உயா்த்தவும் மாநில சுகாதாரத் துறையிடம் வலியுறுத்தப்படும் என்று தொகுதி எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: ஆரணியை அடுத்த சோமந்தாங்கல், சின்னபாண்டி, மேலேரி, எஸ்.யு.வனம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 4 ஆயிரம் கறவை மாடுகள் வளா்க்கப்படுவதால், இந்தப் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்கவும், சிறுமூரில் உள்ள உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தவும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு செய்யல்படுத்தப்படவுள்ளது.

வந்தவாசி தென்கரை கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தவும், இரும்பேடு ஊராட்சியில் சேதமான பள்ளிக் கட்டடத்தை ரூ.65 லட்சத்தில் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செய்யாறு மாவட்ட மருத்துவமனையில் பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான செலவை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி அமைப்பு (டிஆா்டிஓ) மேற்கொள்கிறது.

மேலும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - ஆந்திர மாநிலம் நகரி இடையே ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் அண்ணாமலை, நிா்வாகிகள் பிரசாத், அருணகிரி, டாக்டா் வாசுதேவன், திமுக ஒன்றியச் செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், விண்ணமங்கலம் வி.ரவி, கப்பல் கங்காதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.