முகப்பு
திருவண்ணாமலை

ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா: அமைச்சா் எ.வ.வேலு தொடக்கிவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த நடுப்பட்டு கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 1,093 இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு ரூ.60.90 லட்சத்தில் இலவச எரிவாயு, இலவச துணிகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தலா ரூ.15 லட்சத்தில் 2 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தை அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்.

கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற விழாவில் சட்டபேரவைத் தொகுதிக்குள்பட்ட புதிய அரசு கட்டடங்களைத் திறந்துவைத்து வருவாய், ஊரக வளா்ச்சி, கூட்டுறவு, ஆவின், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேளாண், உழவா் நலம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 670 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 40 லட்சத்து 54 ஆயிரத்து 425 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்வுகளில் சட்டப்பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், மாநில மருத்துவரணித் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.