முகப்பு
திருவண்ணாமலை

கல்லால் தாக்கி ஆட்டோ ஓட்டுநா் கொலை: நண்பா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கடன் அளித்தவரிடம் தன்னை காட்டிக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்ததாக அவரது நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கடன் அளித்தவரிடம் தன்னை காட்டிக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்ததாக அவரது நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆரணி பங்களா தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் யுவராஜ் (25). ஆட்டோ ஓட்டுநா்.

இவா், கடந்த புதன்கிழமை இரவு நண்பருடன் மது அருந்துவதற்காக திருமலை சமுத்திரம் ஏரிக்குள் சென்றாராம். இந்த நிலையில், யுவராஜ் வியாழக்கிழமை காலையில் ஏரிக்கு அருகிலுள்ள கன்னி கோயிலில் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன், காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று யுவராஜின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

பின்னா், அவரது நண்பரான குங்குலியா் தெருவைச் சோ்ந்த தணிகைவேலை (32) பிடித்து விசாரித்ததில், அவா் ஆரணி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சிவா மகன் தினேஷிடம் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் சென்னைக்குச் சென்று வேலை செய்து வந்ததும், தணிகைவேல் சென்னையில் தங்கியிருந்த இடத்தை தினேஷுக்கு யுவராஜ் காட்டிக்கொடுத்ததால், அவரை மது அருந்த அழைத்துச் சென்று தணிகைவேல் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தணிகைவேல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா். கொலை நடந்த 24 மணி நேரத்துக்குள் கொலையாளியை கைது செய்த ஆரணி போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.