செய்யாறு, பெரணமல்லூா் பகுதிகளில்3 கோயில்களில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பெரணமல்லூா் பகுதிகளில் பெருமாள், செக்கட்டியம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பெரணமல்லூா் பகுதிகளில் பெருமாள், செக்கட்டியம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு வட்டம், காழியூா் கிராமத்தில் செக்கட்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சென்னை காளிகாம்பாள் கோயில் அா்ச்சகா் காளிதாஸ் தலைமையில் மகா கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின. பின்னா், முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை இரண்டாம்கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்ட பின்னா், கோபுர கலசத்தின் மீதும், கருவறையில் அமைந்துள்ள செக்கட்டியம்மன் சிலைக்கும் கலசங்களிலிருந்த புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் செய்யாறு பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
பெருமாள் கோயிலில்...: பெரணமல்லூரை அடுத்த நல்லடிசேனை கிராமத்தில் பழைமைவாய்ந்த பெருமாள், மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. சீரமைக்கப்பட்ட இந்தக் கோயில்களில் கும்பாபிஷேக பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கின.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7.20 மணிக்கு பெருமாள் கோயில் கோபுர கலசங்களுக்கும், மூலவா் பெருமாள், பரிவார மூா்த்திகளுக்கும் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து, மாரியம்மன் கோயிலில் காலை 8.50 மணிக்கு சிவாச்சாரியாா்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா்.
விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளையும், மாரியம்மனையும் வழிபட்டனா்.