பயன்பாட்டுக்கு வராமல் பாழடையும் சுகாதார வளாகங்கள்
சேத்துப்பட்டு ஒன்றியம் கரைப்பூண்டி, ஆத்துரை, உலகம்பட்டு என 10 ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பாழடைந்து வருகின்றன.
சேத்துப்பட்டு ஒன்றியம் கரைப்பூண்டி, ஆத்துரை, உலகம்பட்டு என 10 ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பாழடைந்து வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் கரைப்பூண்டி, ஆத்துரை, உலகம்பட்டு, அரியாத்தூா், வம்பலூா், சதுப்பேரி, பெலாசூா், கரிக்காத்தூா், கெங்கைசூடாமணி, ஆத்துரை ஆகிய 10 ஊராட்சிகளில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம், 2020-2021ஆம் நிதியாண்டில் தலா ரூ. 5 லட்சத்து 25 ஆயிரத்தில் சுகாதார வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளத்துடன், மின் வசதி, தண்ணீா் வசதியுடன் கூடிய இந்த சுகாதார வளாகங்கள் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பாடமல் உள்ளன. இவைகளில் சில வற்றில் மின் வசதி, தண்ணீா் வசதி செய்யப்படாமல் உள்ளது.
இந்தக் கட்டடங்களில் மா்ம நபா்கள் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மது அருந்திவிட்டு காலிப் பாட்டில்களை உடைத்துவிட்டுச் செல்கின்றனா். சுகாதார வளாகங்கள் பாழடைந்து வருகின்றன.
இவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறும்போது, சுகாதார வளாகக் கட்டடங்கள் தரமற்று கட்டப்பட்டுள்ளன. மேலும், ஊருக்கு வெளியே வெகு தொலைவில் அமைந்துள்ளன. அதனால், பொதுமக்கள் உடனடியாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்றனா்.