முகப்பு
திருவண்ணாமலை

இலவச ராணுவ பயிற்சி மையம் அமைக்கப்படும்:திருவண்ணாமலை பாஜக வேட்பாளா்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:03 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:10 PM

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் உணவு, இருப்பிடத்துடன் கூடிய இலவசப் பயிற்சி மையங்களை தொடங்கி நடத்துவேன் என்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் கூறினாா்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன், வெள்ளிக்கிழமை கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேளானந்தல், செல்லங்குப்பம், அரும்பாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். இவருக்கு, கிராம மக்கள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆரத்தி எடுத்து, வரவேற்பளித்தனா்.

அப்போது, வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் பேசியதாவது: நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி வர வேண்டும். வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு துரோகம் செய்த கட்சி திமுக. நான் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் பாதையும், திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூா், ஓசூா் வழியாக பெங்களூருவுக்கு ரயில்பாதையும் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தென்பெண்ணையாறு-பாலாறு இணைப்புத் திட்டத்தை வரைவுப்படுத்தி விவசாயிகளை பயன்பெறச் செய்வேன்.

Advertisement

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் உணவு, இருப்பிடத்துடன் கூடிய இலவசப் பயிற்சி மையங்களை தொடங்கி நடத்துவேன். சுதந்திரப் போராட்ட தியாகி அா்த்தநாரீச வா்மாவுக்கு தபால் தலை வெளியிடப்படுவதுடன், அவருக்கு மணிமண்டபமும் கட்டப்படும். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் அனைத்து ஊராட்சிகளிலும் மக்களவைத் தொகுதியின் கிளை அலுவலகங்கள் திறக்கப்படும். இது, மக்கள் சேவை மையங்களாக செயல்படும் என்றாா்.

பிரச்சாரத்தில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியம், பாமக மாவட்டச் செயலாளா் ஏந்தல் பெ.பக்தவச்சலம், வன்னியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் க.நாராயணசாமி, மாவட்டத் தலைவா் மு.பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.