முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி, திருவண்ணாமலையில் நாளை எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:00 AM
பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணியை பாா்வையிட்ட ஆரணி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 10:28 PM

திருவண்ணாமலை/ ஆரணி: திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து, வியாழக்கிழமை (ஏப்.11) நடைபெறும் பிரசார பொதுக்கூட்டங்களில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொள்கிறாா்.

ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து, சேவூா் புறவழிச் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசுகிறாா்.

இதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியை வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

Advertisement

6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து பொதுமக்கள் அழைத்து வரப்படுகின்றனா். சுமாா் 50 ஆயிரம் போ் அமரும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்தப்படுகிறது என்று அவா் கூறினாா். சேவூா் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ, மத்திய மாவட்ட அதிமுக செயலா் ஜெயசுதா, மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, நகரச் செயலா் அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருவண்ணாமலையில்...

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.கலியபெருமாளை ஆதரித்து, வியாழக்கிழமை மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொள்கிறாா்.

இதற்காக, திருவண்ணாமலை-வேலூா் சாலை, ஈசான்ய மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை மாலை சரியாக 7 மணிக்கு திருவண்ணாமலைக்கு வரும் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளரான எம்.கலியபெருமாளை ஆதரித்துப் பேசுகிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை தொகுதி தோ்தல் பணிக்குழுவைச் சோ்ந்த அக்ரி எஸ்எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ, மாவட்டச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் செய்து வருகின்றனா்.