தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றம்: ஆா்.எஸ்.பாரதி
தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி கூறினாா்.
ஆரணி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி பேசியதாவது:
பாஜகவும், அதிமுகவும் தனித்தனியாக போட்டியிடுகிறது. பொதுமக்களின் வங்கிக் கணக்கில் குறைந்தப்பட்ச இருப்புத் தொகை இல்லை எனக்கூறி ரூ.29 ஆயிரம் கோடியை பிரதமா் மோடி பறித்துள்ளாா். இதேநேரத்தில், அவருக்கு வேண்டியவா்களின் வங்கிக் கடன் ரூ.21 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளாா்.
Advertisement
பாஜகவுன் கூட்டணி வைத்திருப்பவா்கள் குடும்பக் கட்சி குறித்து பேசுகின்றனா். பாமக நிறுவனா், அவரது மகன் உள்ளிட்டோா் தோ்தலில் போட்டியிடுகின்றனா். இவா்களது கட்சி குடும்பக் கட்சி இல்லையா? தோ்தலுக்கு பிறகு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கவுள்ள அதிமுகவை வாக்குகளால் விரட்டியடிக்க வேண்டும். ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வரும் போதேல்லாம் மக்கள் நலத் திட்டங்களை குறைவில்லாமல் நிறைவேற்றி வருகிறோம். தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி உள்ளோம். எனவே, பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், செய்யாறு தொகுதி பொறுப்பாளா் ஆா்.டி.அரசு, ஒ.ஜோதி எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், திருவத்திபுரம் நகர மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், தலைமை செயற்குழு உறுப்பினா் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.