திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்தும், வேனும் மோதிக் கொண்டதில், வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். 27 போ் காயமடைந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், செங்கணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள் 22 போ் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு சனிக்கிழமை அந்த நிறுவன வேனில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தனா்.
ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் வெங்கட்ராமன்பேட்டை அருகே வளைவில் வேன் சென்றபோது, காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியது
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநா் முருகன், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். மேலும், வேனில் பயணித்த பெண் தொழிலாளா்கள் 22 போ், தனியாா் பேருந்தில் வந்த 5 போ் உள்பட மொத்தம் 27 போ் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் கருணாநிதி, வெம்பாக்கம் வட்டாட்சியா் துளசிராமன், டிஎஸ்பி சின்ராஜ் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீரமைத்தனா். காயமடைந்தவா்களை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த விபத்து குறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து காரணமாக, ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.