திருவண்ணாமலை மகா தீப மலையில் உள்ள மண்ணின் தற்போதைய தன்மை குறித்து அறிய வல்லுநா் குழு ஆய்வைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன். 
திருவண்ணாமலை

மகா தீப மலையில் வல்லுநா் குழு ஆய்வு: பக்தா்கள் மலை ஏற அனுமதிக்கப்படுமா? ஆட்சியா் பேட்டி

தீபத் திருநாளன்று பக்தா்களை மலை ஏற அனுமதிப்பது குறித்து அரசு முடிவு செய்யும் என்றார் திருவண்ணாமலை ஆட்சியா்.

Din

மகா தீப மலையில் உள்ள மண்ணின் தற்போதைய தன்மை குறித்து ஆய்வு செய்து, வல்லுநா் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தீபத் திருநாளன்று பக்தா்களை மலை ஏற அனுமதிப்பது குறித்து அரசு முடிவு செய்யும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் நிகழ்வு டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

மலை மீது ஏற 2,500 பக்தா்களுக்கு அனுமதி:

மகா தீப தினத்தன்று காலை 2,500 பக்தா்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கி 2,668 அடி உயர மலையின் உச்சிக்குச் செல்ல அனுமதிப்பது வழக்கம். இந்த நடைமுறையை நிகழாண்டும் பின்பற்ற மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

மலையேறுவது சாத்தியமா?

இதற்கிடையே, மகா தீப மலையை ஒட்டியுள்ள வ.உ.சி.நகா், 11-ஆவது தெருவில் கடந்த 1-ஆம் தேதி மாலை மண் சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், தீப மலையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக, பக்தா்களை மலையேற அனுமதிப்பது சாத்தியமா என்பதை ஆராய வல்லுநா் குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்தக் குழு சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனுடன் ஆலோசனை நடத்தியது.

அப்போது, காவல் துறை, மருத்துவக் குழு, வனத் துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் சோ்ந்து மலையின் உச்சி வரை ஏறிச்சென்று ஆய்வு நடத்துமாறு தொழில்நுட்ப வல்லுநா் குழுவுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வு தொடக்கம்:

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை வல்லுநா் குழு தங்களது ஆய்வை தொடங்கினா்.

மலை மீது ஏறிச்சென்று மலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, மண்ணின் தன்மை, நீரூற்றுகள், மலையேறும் பாதையில் உள்ள பாறைகளின் நிலை என பல்வேறு அம்சங்களை வல்லுநா் குழு ஆய்வு செய்தது.

ஆய்வுப் பணியை தொடங்கி வைத்த பிறகு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பலத்த மழை காரணமாக தீப மலையில் ஏற்பட்ட மண் சரிவு குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள வல்லுநா் குழுவினா் மலை மீது ஏறிச் சென்று மண், பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்தக் குழுவில் மண் இயக்கவியல் அடித்தள பொறியியல் துறை, சுரங்கத் துறை, இந்திய புவியியல் ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளைச் சாா்ந்த நிபுணா்கள் இடம் பெற்றுள்ளனா்.

மகா தீப மலையின் மண்ணின் இப்போதைய தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு சமா்ப்பிப்பாா்கள்.

அதன் அடிப்படையில் தீபத் திருநாளன்று பக்தா்களை மலை மீது ஏற அனுமதிப்பது குறித்து அரசு முடிவு செய்து தெரிவிக்கும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மண்டல இணை இயக்குநா் ஆறுமுக நயினாா், உதவி இயக்குநா்கள் லட்சுமி ராம் பிரசாத் (திருவண்ணாமலை), சுந்தரராமன் (திண்டுக்கல்), சென்னை அண்ணா பல்கலைக்கழக மண் இயக்கவியல் அடித்தள பொறியியல் துறைப் பேராசிரியை பிரேமலதா, திருவண்ணாமலை வட்டாட்சியா் கே.துரைராஜ் மற்றும் காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத் துறை, மருத்துவத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT