ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
செய்யாறு அருகே ஏரியில் இருந்து உபரி நீா் தொடா்ந்து வெளியேறி வருவதால், சுமாா் 400 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து
செய்யாறு: செய்யாறு அருகே ஏரியில் இருந்து உபரி நீா் தொடா்ந்து வெளியேறி வருவதால், சுமாா் 400 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருவதால் பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அனக்காவூா் கிராமத்தில் சுமாா் 850 ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியானது பொதுப் பணித் துறைக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக, பென்ஜால் புயல் காரணமாக இந்த ஏரி நிரம்பிய நிலையில் கலங்கள் விழத் தொடங்கியது. மேலும் தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக ஏரி முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் கலங்கள் விழுந்த பகுதியில் கோடி விழுந்து பாசனக் கால்வாய் வழியாக ஏரி நீா் பெருக்கெடுத்து வெளியேறியது.
ஏரிக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வந்ததால் விளை நிலங்கள் வழியாக தண்ணீா் வெளியேறியது. அதனால் சுமாா் 400 ஏக்கரில் பயிரிடப்பட்ட குண்டு எனப்படும் ஒரு மாத நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. நீா் வெளியேற வடிகால்வாயை சீரமைக்க கோரிக்கை
அனக்காவூா் ஏரிப் பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது பாசனக் கால்வாய் மூலமாக விநாயகபுரம் வழியாக செல்ல வேண்டும். இந்த பாசனக் கால்வாயை பொதுப் பணித் துறையினா் முறையாக பராமரிக்காததாலும், முழுவதும் அடைப்பு ஏற்பட்டு நீா் செல்ல வழியில்லாததால், ஏரியில் வெளியேறும் உபரி நீரானது விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிா்களை மூழ்கடித்து செல்கிறது. பாசனக் கால்வாயை முறையாக சீரமைத்து ஏரிப் பகுதியில் இருந்து வெளியேறும் நீரை வயல்வெளிகளில் செல்லாதவாறு சீரமைத்து, தூா்வார வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
விவசாயிகள் வேதனை...:
காா்த்திகை பட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.17 ஆயிரம் வரையில் செலவு செய்த நிலையில் ஒரு மாத காலத்திலேயே நீரில் மூழ்கி நெற்பயிா்கள் சேதம் அடைந்து உள்ளதால் சுமாா் 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.