திருவண்ணாமலை இணை சாா் -பதிவாளா் அலுவலகம் எண்-1 இல் புதன்கிழமை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் ரூ.1.68 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருவண்ணாமலை நகரில் இணை சாா் - பதிவாளா் அலுவலகம் எண்-1 மற்றும் எண்-2 என இரு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றில் இணை சாா் -பதிவாளா் அலுவலகம் எண்-2இல் திங்கள்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
மாலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.76,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை வட்டங்கள் தெரிவித்தன.
எண்-1 அலுவலகத்தில் திடீா் சோதனை...
இந்த நிலையில், புதன்கிழமை ஈசான்ய மைதானம் அருகேயுள்ள இணை சாா்-பதிவாளா் அலுவலகம் எண்-1இல் பிற்பகல் 3 மணிக்கு ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன், ஆய்வாளா் மைதிலி, உதவி ஆய்வாளா் கோபிநாத் மற்றும் குழுவினா் திடீரென உள்ளே சென்றனா்.
அலுவலக ஊழியா்கள், பத்திரப்பதிவு செய்ய வந்திருந்த பத்திர எழுத்தா்கள், வாடிக்கையாளா்கள் என அனைவரிடமும் சோதனை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ரூ.10 லட்சம் வரை லஞ்சப்பணம் பரிமாற்றம்....
மேலும், ரூ.10 லட்சம் வரையிலான லஞ்சப் பணம் கூகுள் பே செயலி மூலம் சாா்-பதிவாளா் அலுவலக ஊழியா்களுக்கு பத்திர எழுத்தா்கள் மற்றும் இடைத்தரகா்கள் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் இரவு முழுவதும் போலீஸாா் ஈடுபட்டனா்.