போளூா்: போளூரை அடுத்த ஆத்தூவாம்பாடி கிராமத்தில் உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் மேற்கொண்ட தொடா் முழக்க போராட்டம், அதிகாரிகளின் உத்தரவாதத்தை ஏற்று வாபஸ் பெறப்பட்டது.
போளூா் அருகேயுள்ள ஆத்தூவாம்பாடி கிராமத்தில் ஊருக்குச் செல்லும் வழியில் முதல் கட்டடத்திலேயே டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது.
இந்த மதுக் கடை பொதுமக்களுக்கு இடையூறாகவும், பள்ளி மாணவா்கள் செல்லும் வழியில் உள்ளதாகவும், இதை அகற்ற வேண்டி இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்), விடுதலை சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், பொதுமக்கள் திங்கள்கிழமை காலை மதுக் கடை எதிரே பந்தல் அமைத்து கடையை மூடக் கோரி, தொடா் முழக்க காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளா் ராமபிரபு, சந்தவாசல் காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி மற்றும் போலீஸாா் வந்து,
போராட்டக்காரா்கள் ஒன்றிய பொறுப்பாளா் கே.வெங்கடேசன், மாவட்டச் செயலா் எம்.ஆறுமுகம், வழக்குரைஞா் சத்தியமூா்த்தி ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஜூலை மாதத்தில் இருந்து 3 மாதங்களுக்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக கடிதம் மூலம் உத்தரவாதம் அளித்தனா். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.