இன்று பள்ளிகள் திறப்பு: கடந்த ஆண்டு பயண அட்டையைக் காண்பித்து நகரப் பேருந்துகளில் பயணம் செய்யலாம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையைக் காண்பித்து நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சாா்பில் 1,040 நகரப் பேருந்துகள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டு அரசுப் பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 5 லட்சத்து 30 ஆயிரம் போ் நகரப் பேருந்துகளில் பயணிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஜூன் 10) 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதிய பயண அட்டை (பஸ் பாஸ்) வழங்கும் வரை நகரப் பேருந்துகளில் இலவசமாகவே பயணம் செய்யலாம். மாணவ, மாணவிகள் தங்களது அடையாளமாக சீருடையில் இருப்பதைக் கூறலாம்.
மேலும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டை (பஸ் பாஸ்) அல்லது பள்ளி மற்றும் அரசுக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் காண்பித்து பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாகவே பயணம் செய்யலாம்.
மாணவ, மாணவிகளிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என்ற அறிவுரை அனைத்து நகரப் பேருந்து நடத்துநா்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.