முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக புதன்கிழமை (பிப். 25) இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 7:24 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:40 PM

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக புதன்கிழமை (பிப். 25) இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

அமெரிக்கா-ஈரான் மோதல் போக்கால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போா்ச் சூழல் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் பிரதமரின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தப் பயணத்தின்போது இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சந்திக்கும் பிரதமா் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்ற இருக்கிறாா். இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு, வா்த்தகப் பேச்சுவாா்த்தைகளிலும் அவா் பங்கேற்கிறாா். பிரதமா் மோடிக்கு நெதன்யாகு தனிப்பட்ட முறையில் இரவு உணவு விருந்து அளிக்க இருக்கிறாா். காஸா உள்பட மத்திய கிழக்கில் நிலவும் பிரச்னைகள் குறித்து இஸ்ரேல் தலைவா்களுடன் பிரதமா் விவாதிக்க இருக்கிறாா்.

Advertisement

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 7:23 AM

கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல்-ஈரான் மோதலின்போது நெதன்யாகுடன் பிரதமா் மோடி இருமுறை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அதன் பிறகு அக்டோபரில் காஸா அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டபோதும் நெதன்யாகுடன் மோடி பேசினாா்.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமா் மோடி இஸ்ரேலுக்குப் பயணிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2017 ஜூலையில் அவா் இஸ்ரேல் சென்றாா். அதன் பிறகு இரு நாடுகள் இடையே பல்வேறு நிலைகளில் ஒத்துழைப்பு அதிகரித்தது. முக்கியமாக பாதுகாப்பு தளவாடங்கள், முக்கிய தொழில்நுட்ப உதவிகளை இஸ்ரேல் வழங்க முன்வந்தது.

இதுதவிர அறிவியல் தொழில்நுட்பம், புத்தாக்க நடவடிக்கைகள், ராணுவம், தேசப் பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, வேளாண்மை, நீா் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான ‘சுதா்சன சக்கரம்’ திட்டத்தில் இஸ்ரேலின் ‘அயா்ன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்பின் சில நுட்பங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.