முகப்பு
உலகம்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் பற்றி...

Updated On : 25 பிப்ரவரி 2026, 2:01 pm IST
இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்கா-ஈரான் மோதல் போக்கால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போா்ச் சூழல் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் பிரதமரின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தப் பயணத்தின்போது இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சந்திக்கும் பிரதமா் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்ற இருக்கிறாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இஸ்ரேல் பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது:

”இன்றும் நாளையும் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன். நமது நாடுகள் வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் இரு நாட்டின் உறவுகள் கணிசமாக வலுப்பெற்றுள்ளன.

பிரதமர் நெதன்யாகுவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்போம். இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் சந்திக்கவுள்ளேன்.

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் இன்று மாலை உரையாற்றவுள்ளேன். இது நம்மை இணைக்கும் வலுவான நாடாளுமன்ற மற்றும் ஜனநாயக உறவுகளுக்கு ஒரு மரியாதை. இந்தியா - இஸ்ரேல் நட்பை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பைச் செய்யும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுடனும் நான் உரையாடவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தின்போது, பிரதமா் மோடிக்கு நெதன்யாகு தனிப்பட்ட முறையில் இரவு உணவு விருந்து அளிக்க இருக்கிறாா்.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமா் மோடி இஸ்ரேலுக்குப் பயணிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2017 ஜூலையில் அவா் இஸ்ரேல் சென்றாா். அதன் பிறகு இரு நாடுகள் இடையே பல்வேறு நிலைகளில் ஒத்துழைப்பு அதிகரித்தது. முக்கியமாக பாதுகாப்பு தளவாடங்கள், முக்கிய தொழில்நுட்ப உதவிகளை இஸ்ரேல் வழங்க முன்வந்தது.

இதுதவிர அறிவியல் தொழில்நுட்பம், புத்தாக்க நடவடிக்கைகள், ராணுவம், தேசப் பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, வேளாண்மை, நீா் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான ‘சுதா்சன சக்கரம்’ திட்டத்தில் இஸ்ரேலின் ‘அயா்ன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்பின் சில நுட்பங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Prime Minister Modi leaves for Israel!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.