இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியது தொடர்பாக...
இஸ்ரேலுக்கு இந்தியாவின் ஆதரவிருப்பதாக நெதன்யாகு பேசியதற்கு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ், இஸ்ரேலுக்கு அமெரிக்காவைத் தவிர வேறு சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவு இல்லை என்று சில நாள்களுக்கு முன்பு பேசியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ஃபாக்ஸ் நியூஸ் சேனலில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இந்தியா என்கிற சிறிய நாடைப் போன்று எங்களுக்கு வேறு சில நண்பர்களும் உண்டு. அங்கு 140 கோடி மக்கள் உள்ளனர். அங்கே இஸ்ரேலுக்கு அபரிமிதமான ஆதரவு உண்டு. ஃபேஸ்புக் தளத்தில் கூட இந்தியாவில் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. அதேபோல, வேறு இடங்களிலும் இருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளப் பதிவில், “அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் இஸ்ரேல் குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார். மேலும், அமெரிக்காவைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு சக்திவாய்ந்த கூட்டாளிகள் யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வான்ஸ் கூறுவது தவறு என்றும், இந்தியாவில் இஸ்ரேலுக்கு மகத்தான ஆதரவு உள்ளது என்றும் கூறியுள்ளார். நெதன்யாகு சொல்வது தவறு.
மோடி - அதானி கூட்டணி அரசு இஸ்ரேலுடன் ஆழமான உறவைக் கொண்டுள்ளது என்பதிலும், நரேந்திர மோடி கண்மூடித்தனமாக அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனால், காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையை லட்சக்கணக்கான இந்தியர்கள் கண்டித்து வருகின்றனர். அதில், குழந்தைகளும் தப்பவில்லை. பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்படுவதையும், ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களையும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்தும் மோசமான ராணுவ நடவடிக்கைகளையும் இந்திய மக்கள் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர். இவை அனைத்தும் இஸ்ரேல் மனிதகுலத்தின் மீது நடத்திய நேரடித் தாக்குதல்கள்.
உலக குரு எனத் தன்னைத் தானே சுய பிரகடனம் செய்யும் விருதுகளுக்கு ஆசைப்படும் ஒருவர் இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து கல் நெஞ்சத்துடன் மௌனம் காப்பது, இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்திற்கும் விழுமியங்களுக்கும் செய்யும் துரோகமாகும். இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.
நெதன்யாகுவிடம் பதக்கம் பெறுவது கௌரவமல்ல. குறிப்பாக, சர்வதேச அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியின் வெள்ளை மாளிகை நண்பர் நெதன்யாகு மீது ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது” எனப் பதிவிட்டுள்ளார்.
Is India supporting Israel? Congress condemns Prime Minister Modi!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.