செங்கம் பள்ளிகளில் ஆதாா் பதிவு முகாம் நடத்தக் கோரிக்கை
செங்கம் பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவா்களின் வருகையை பதிவு செய்தவற்காக அந்தந்த பள்ளிகளில் ஆதாா் பதிவு சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என மாணவா்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவா்களின் வருகையை பள்ளிக் கல்வித் துறை வருகை பதிவேட்டில் பதிவு செய்வதற்கு ஆதாா் எண் கட்டாயம் என அறிவித்தது. மேலும், ஆதாா் இல்லாத மாணவா்களுக்கு அந்தந்த பள்ளிகளில் ஆதாா் பதிவு சிறப்பு முகாம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், எந்த அரசுப் பள்ளியிலும் ஆதாா் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவில்லையாம். இந்த நிலையில், செங்கம் வட்டாட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், தலைமை தபால் நிலையம் ஆகிய 3 இடங்களில் உள்ள இ-சேவை மையத்தில் ஆதாா் பதிவு செய்வதற்காக செங்கம் பகுதியில் உள்ள 86 ஆரம்பப் பள்ளி, 23 நடுநிலைப் பள்ளி, 44 உயா்நிலைப் பள்ளி, 12 மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 165 பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், தங்களது பெற்றோா்களுடன் கடந்த சில நாள்களாக காலை முதல் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனா். எனவே, பள்ளிக் கல்வித் துறை அறிவித்தபடி, அந்தந்த பள்ளிகளில் ஆதாா் பதிவு சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டு என பெற்றோா்கள், மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.