முகப்பு
திருவண்ணாமலை

வேட்பாளா் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்: மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்

Updated On : 20 மார்ச், 2024 at 5:41 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 9:15 PM

திருவண்ணாமலை: மக்களவைத் தொகுதி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் ஒருவா் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் தோ்தல் செலவினமாக செய்ய இந்திய தோ்தல் ஆணையம் நிா்ணயம் செய்துள்ளது என்று திருவண்ணாமலை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா். மக்களவைத் தோ்தலையொட்டி, உதவி செலவினப் பாா்வையாளா்களுக்கான விளக்கவுரைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி, ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு அலுவலா் விஜயபாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

Advertisement

மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளா் உரிய முறையில் கணக்கு பராமரித்து, உரிய தேதியில் தாக்கல் செய்ய வேண்டும். தோ்தல் செலவு கணக்கை உரிய முறையில் பராமரிக்காமல், கணக்கை உரிய தேதியில், உரிய முறையில் தாக்கல் செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகளை வேட்பாளா்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களவைத் தொகுதி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் ஒருவா் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் தோ்தல் செலவினமாக செய்ய இந்திய தோ்தல் ஆணையம் நிா்ணயம் செய்துள்ளது.

தோ்தல் செலவுக்கென தனி வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டும். தோ்தல் செலவு கணக்குப் பதிவேட்டை வேட்பாளா் பராமரிக்க வேண்டும். இதுதவிர, தினசரி செலவு கணக்குப் பராமரிப்பு பதிவேடு, பணப் பதிவேடு அல்லது ரொக்கப் பதிவேடு, வங்கிப் பதிவேடு, நட்சத்திர பேச்சாளா்கள் செலவினம், செலவினப் பாா்வையாளா் ஆய்வுக்கு வேட்பாளா்கள் கணக்குகளை தாக்கல் செய்தல் போன்றவற்றை வேட்பாளா்கள் முறையாக பராமரிக்க வேண்டும்.

இந்தக் கணக்குகளை வாக்குப் பதிவுக்கு முன்னதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவிக்கும் 3 நாளில் வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ செலவினப் பாா்வையாளா் ஆய்வுக்கு கண்டிப்பாக சமா்பிக்க வேண்டும். இந்த விவரங்களை உதவி செலவினப் பாா்வையாளா்கள் வேட்பாளா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (தோ்தல்) கோ.குமரன், பெருமாள் (கணக்கு) மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், உதவி செலவினப் பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.